ஸ்பெயின் நாட்டு குகை ஒன்றில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பாதுகாக்கப்பட்ட கூடைகளில் 20 ஜோடிக்கும் அதிகமான செருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. முற்றிலும் காய்ந்த புல்லில் செய்யப்பட்ட இந்த செருப்புகள் சுமார் 6,200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியவை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் கருவிகள், ஆடைகள் மற்றும் பல்வேறு கலைப் பொருட்கள் தாவரங்களை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டன என்பது பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பொருட்கள் விரைவில் அழிந்துவிடும் என்பதால், கண்டுபிடிக்கப்பட்ட அந்த பொருட்கள் பல இடங்களில் சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளன. உலகெங்கிலும் உள்ள தொல்பொருள் இடங்கள் மூலமாக பண்டைய கால மனிதர்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
இத்தகைய அகழ்வாராய்ச்சி தளங்களில் ஸ்பெயினில் கிரனாடா கடற்பகுதியில் அமைந்துள்ள வவ்வால்களின் குகையும் அடங்கும். இது 1830களின் முற்பகுதியிலேயே கண்டறியப்பட்டது. இங்கு 1850களில் நடைபெற்ற சுரங்கப் பணியின்போது பல பொருட்களின் எச்சங்கள் மற்றும் மம்மி செய்யப்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை சமீபத்திய தொழில்நுட்ப உதவியுடன் கார்பன் டேட்டிங் முறையைப் பயன்படுத்தி அதன் காலத்தை கண்டறிய முற்பட்டபோது ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது இந்தப் பொருட்கள் சுமார் 9,500 மற்றும் 6,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த வேட்டைக்கார சமூகங்களால் உருவாக்கப்பட்ட குகைகள் இருப்பது உண்மை என்பதற்கான நேரடி ஆதாரத்தை வழங்குகிறது. மேலும், இது முந்தைய காலத்தில் வேட்டை மற்றும் சேகரிப்பு முறையின் அங்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அங்கே புதைக்கப்பட்டிருந்த மம்மிக்களை ஆய்வு செய்தபோது பண்டைய கால சடங்குகளில் அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இதன் மூலமாக அந்தக் காலத்திலேயே மனிதர்கள் செருப்புகளை அணிந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன.