ரோஜாக்கள் என்றாலே அனைத்து பெண்களுக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் எளிதாக கிடைக்கூடிய பூக்களாகும். திருமணத்திலிருந்து, கோவில் திருவிழாக்கள் வரை புகழ்பெற்ற ஒரு பூ என்றால், அது ரோஜா பூ தான். இந்த ரோஜா பூவை வாங்காத குடும்பங்களே இல்லை. அப்படியிருக்க, உங்கள் வீட்டில் சிறிது நிலம் இருந்தால் கூட பெரிய அளவில் சம்பாதிக்கலாம். அந்தவகையில் ரோஜா பூக்களை சாகுப்படி செய்யும் முறைகளை பற்றி பார்ப்போம்.
ரோஜா சாகுபடிக்கான வழிமுறைகள்:
1. இந்தியாவில் ரோஜா சாகுபடிக்கான ஏற்ற வெப்பநிலை ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார் போல் மாறும். ஆனால், பொதுவாக ரோஜாக்கள் 15 டிகிரி செல்ஸியஸ் முதல் 25 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பநிலையில் வளரக் கூடியது. போதுமான சூரிய ஒளி, நல்ல காற்று சுழற்சி மற்றும் நல்ல மண் ஆகியவை வெற்றிகரமான ரோஜா சாகுபடிக்கு முக்கியமான காரணிகளாகும்.
2. நல்ல இடத்தை தேர்ந்தெடுக்கவும். குறைந்தது 6 மணி நேரம் சூர்ய ஒளி இல்லாத இடமாகவும், பலத்த காற்றில்லாத இடமாகவும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், அந்த இடத்தின் மண் நன்றாக வடிகட்டிய மண்ணாகவும், கரிமப்பொருட்கள் நிறைந்ததாகவும், pH 6.0 மற்றும் 7.5 க்கு இடையிலான மண்ணாகவும் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
3. ரோஜா செடியின் விதைகள் மூலமாகவோ அல்லது வேர் தண்டுகள் மூலமாகவோ நடவு செய்யலாம். வணிக ரோஜாக்களை தேர்ந்தெடுப்பவர்கள் எப்போதும் வேர் தண்டுகளை பயன்படுத்தியே சாகுபடி செய்வார்கள்.
4. கரிமப் பொருட்களை சேர்த்து, சரியான வடிகால் மூலம் மண்ணை தயார் செய்யவும். செடியின் வேர்கள் நன்றாக புதையும் அளவிற்கு குழி தோண்டவும். வேர் ஆரம்பிக்கும் மேல் பகுதி, குழி ஆரம்பிக்கும் இடத்தில் சமமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பின் மெதுவாக குழியை மணலால் மூடவும். பிறகு தண்ணீர் ஊற்றவும்.
5. ரோஜாக்களுக்கு வழக்கமான நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது, குறிப்பாக அது வளரும் பருவத்தில். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நீர்ப்பாசனம் செய்யுங்கள். நீர்ப்பாசனங்களுக்கு இடையில் மண்ணை சிறிது உலர வைப்பதும் அவசியம். ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் ஏராளமான பூக்களை வழங்க சீரான ரோஜா உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துங்கள்.
6. அவ்வப்போது, தேவையில்லாதவற்றை மற்றும் அதிக இலைகள் வளர்ந்தால், அதில் சில இலைகளை நறுக்கி விடுங்கள். அதேபோல் ரோஜா செடியை கடையில் வாங்கி வரும்போதும், அதில் பூத்திருந்த பூக்களையும் நறுக்கிவிடுவது நல்லது.
தேர்ந்தெடுக்க வேண்டிய ஹைப்ரிட் ரோஜாக்கள்:
Hybrid Tea Roses: நீண்ட தண்டுகளில் பெரிய பூக்களைத் தரும் இந்த வகை ரோஜாக்கள் நேர்த்திக்கும், நறுமணத்திற்கும் பெயர் போனது.
Floribunda Roses: இந்த ரோஜாக்களில் நிறைய வகை உள்ளன. இரட்டை பூக்களாக வளரும் இந்தச் செடிகள் கொத்து கொத்தாக பூக்களைத் தரும்.
Climbing Roses: சுவர்கள், வேலிகள் என அனைத்து உயரமான இடங்களிலும் படரும் இந்த செடிகள் ஏராளமான பூக்களை வழங்குகின்றன.
Miniature Roses: குறுகிய இடங்களில் சிறிய சிறிய பூக்களை தரும் இந்த Miniature Roses, சிறிய இடைவெளிகளிலும் வளர்க்கலாம்.
இந்த ஹைப்ரிட் செடிகளை நன்றாக ஆலோசித்துவிட்டு உங்கள் நிலத்திற்கு ஏற்ற செடிகளை வாங்குவது நல்லது.