ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் கடலில் வீசப்படுகின்றன. அதில் குறைந்தது 60 சதவிகிதம் பிளாஸ்டிக் பொருட்களால் ஆனவை. கடலின் ஒவ்வொரு சதுர மைலுக்கும் 46 ஆயிரம் தனித்தனி பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. பூமியின் பெருங்கடல்களின் ஆரோக்கியத்திற்கு இவை மோசமான பெருங்கேட்டை தருகின்றன. மேலும், இது மக்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கிறது. ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் மற்றும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஆமைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏராளமான மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் கொல்லப்படுகின்றன.
சர்வதேச கடலோர துப்புரவு தினத்தின் வரலாறு: ஒவ்வொரு ஆண்டும் கடல் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து கடலைப் பாதுகாக்க உதவும் அமைப்பான ஓஷன் கன்சர்வேன்சியால் சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் நிறுவப்பட்டது. இது 1986ம் ஆண்டு வாஷிங்டன் மாநிலத்தின் மேற்கு கடற்கரையில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இப்போது, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அன்று கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் சர்வதேச கடலோர துப்புரவு தினத்தின் மூலம் கடல்களை சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளன. நூறுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இந்த நாளில் ஒருங்கிணைந்து கடற்கரை ஓரங்களை சுத்தப்படுத்துவதில் இறங்கியுள்ளனர். இதனால் பெருங்கடல்கள் மற்றும் கடல்களில் உயிர்வாழும் தாவரங்கள், கடல் வாழ் விலங்குகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறார்கள்.
இந்த நாளில் அவர்கள் கடற்கரைக்குச் சென்று கடலோரத்தில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுகிறார்கள். 12 மில்லியனுக்கும் அதிகமான தன்னார்வலர்கள் உலகின் கடற்கரைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரையோரங்களில் இருந்து குப்பைகளை சேகரிக்கின்றனர்.
கடலோரப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதில் மனிதர்களின் பங்கு:
1. கடற்கரை மற்றும் ஏரி போன்ற இடங்களுக்குச் செல்லும்போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை தவிர்க்க வேண்டும். துணிப்பைகள், துருப்பிடிக்காத எஃகு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உலோகத் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.
2. அங்கே சென்று தின்பண்டங்களை உண்டு விட்டு குப்பைகளை வீசி எறியாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். அல்லது கடலோரப் பகுதியை விட்டு வெளியேறும்போது குப்பைகளை தன்னுடனேயே எடுத்துச் செல்லலாம்.
3. கரையோர பகுதிகளுக்கு அருகில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில், அவை நீர் வழிகளை மாசுபடுத்தும் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
4. கடற்கரைப் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கடற்கரையை சுத்தம் செய்வதிலும் நிலையான நடைமுறைகளை பின்பற்றுவதற்கும் பிறரை ஊக்குவிக்க வேண்டும்.
5. சுற்றுச்சூழலுக்கு உகந்த துப்புரவுப் பொருளைப் பயன்படுத்த வேண்டும். கடுமையான ரசாயனங்கள் மற்றும் மாசுக்கள் இல்லாத துப்புரவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நீர் வழிகளை மாசுபடுத்தும் பொருட்களை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
6. கடலோரத்தில் அல்லது நீர்நிலை அருகில் எண்ணெய்க் கசிவுகள் அல்லது கழிவு நீர் கசிவுகள் போன்றவற்றை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
7. அனைத்து நீர் வழிகளும் இறுதியில் கடலை சென்றடையும் என்பதால் உள்ளூர் ஆற்றங்கரை, ஏரி அல்லது கால்வாய், குளம் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் மற்ற குப்பைகளை கையுறைகள் அணிந்து கொண்டு சேகரிக்கலாம்.
நாம் எடுக்கும் இந்த முயற்சிகளால் கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமல்ல, மனிதர்களுக்கும் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.