Did you know that ants are the precursors of human society?
Did you know that ants are the precursors of human society? https://twitter.com
பசுமை / சுற்றுச்சூழல்

எறும்புகள் மனித சமூகத்தின் முன்னோடிகள் என்பது தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

சுறுசுறுப்புக்கு உதாரணமாக எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் எறும்புகளைத்தான் கூறுவார்கள். எறும்புகளின் இனம் பூமிக்கு வந்து பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. அந்தளவுக்கு பழைமை வாய்ந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து எறும்புகள் இனம் இன்று வரை நீடித்து வாழ்கின்றன. பூமியில் சுமார் 20 ஆயிரம் லட்சம் கோடிக்கும் அதிகமாக எறும்புகள் வாழ்வதாக ஓர் ஆய்வில் கணக்கிடப்பட்டு உள்ளது.

எறும்புகள் இனத்தில் மிகவும் பழைமையானது, ‘இலை வெட்டி எறும்புகள்’ என்கிறார்கள். இது பூமியில் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், மனித இனம் தோன்றியது 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான். இலைகளை வெட்டுவதால் அந்த எறும்பை, ‘இலை வெட்டி எறும்பு’ என்று அழைக்கிறார்கள். இலைகளை வெட்டிய உடன் அப்படியே பச்சையாக இவை சாப்பிடுவதில்லை. புற்றுக்குள் ஓரிடத்தில் இலைகளைச் சேமிக்கின்றன. அந்த இலைகளின் மீது வேதித் திரவத்தைச் சுரக்கின்றன.

சில நாட்களில் இலைகள் மட்கி, அதில் பூஞ்சை உருவாகும். அந்தப் பூஞ்சைகளைத்தான் இலைவெட்டி எறும்புகள் சாப்பிடுகின்றன. அதனால்தான் இந்த எறும்புகளை, ‘விவசாயிகள்’ என்று சொல்கிறார்கள். அதாவது விவசாயம் செய்வதில் இவை மனிதர்களுக்கு முன்னோடிகள்! இந்த வகை எறும்புகள் பூமிக்கு அடியில் 6500 சதுர அடியில் கூடுகளை கட்டி வாழ்கின்றன. மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன.

எறும்புகள் குழுவாக வாழும் 6 கால்களைக் கொண்ட ஒரு பூச்சி இனம். எறும்புகள் அதன் எடையை விட 10 முதல் 50 மடங்கு எடையுள்ள பொருட்களைக் கூட தூக்கிச் செல்லும் ஆற்றல் மிக்கவை. சாதாரண வகை எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர் வாழும். ஆனால், அதிலுள்ள கருப்பு வகை பெண் எறும்புகள் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்கிறார்கள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்.

எறும்புகள் கூட்டமாக வாழுமிடத்தை ஆங்கிலத்தில் காலனி என்கிறார்கள். அதை நாம் புற்று என்கிறோம். சராசரியாக ராணி எறும்புகள் 30 வருடங்கள் வரை உயிர் வாழும். வேலைக்கார எறும்புகள் 3 வருடம் வரை உயிர் வாழும். ஆண் எறும்புகள் சில மாதங்களுக்கு மட்டுமே உயிர் வாழும். சில எறும்புகள் நீருக்கு அடியில் 4 மணி நேரம் உயிர் வாழும்.

இலைவெட்டி எறும்பு

ஒரு எறும்புகள் கூட்டத்தில் நூறு முதல் லட்சம் வரை பல எறும்புகள் உயிர் வாழ்கின்றன. எறும்புகளின் மூளையில் 25000க்கும் மேற்பட்ட அறைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மிகச் சிறந்த மோப்ப சக்தியும், கண் பார்வையும் கொண்டது எறும்புகள். இதனால் நிலநடுக்கத்தை முன் கூட்டியே அதனால் அறிந்துகொள்ள முடியும். எறும்புகள் பகல் முழுவதும் இரை தேடி அலையும். இரவில் தன்னுடைய புற்றுகளில் ஓய்வு எடுக்கும். உணவுப் பொருட்களை தரையில் காணும் எறும்புகள் தனது சகாக்களுக்கு தனது தலையில் உள்ள ஆன்டெனா போன்ற உறுப்பின் மூலம் தகவலை தெரிவிக்கின்றன.

எறும்புகள் எங்கு சென்றாலும் வரிசையாகவே செல்வதை கவனித்திருப்பீர்கள். இதற்கு என்ன காரணம்? எறும்புகள் வரிசையில் செல்வதற்கும் திரும்பி வரும்போது ஒன்றுடன் ஒன்று சந்தித்துக்கொள்வதற்கும் அறிவியல்ரீதியாக என்ன காரணம்? எறும்புகள் எப்பொழுதும் கூட்டணியாகத்தான் வாழும். தங்களின் வசிப்பிடம் அல்லது இனத்தைப் பொறுத்து குழுக்களாக வாழும். எனவே, உணவு தேட எறும்புகள் செல்லும்பொழுது, ‘பீரோமோன் (Pheromone)’ என்னும் இரசாயனத்தை வழியில் விட்டுச்செல்லும்.

இதனால் முதலில் செல்லும் எறும்பின் இரசாயனத்தை, அதன் பின் வரும் எறும்பு நுகர்ந்து பின் தொடரும், தானும் இரசாயனத்தை விட்டுச் செல்லும். இதனால், அனைத்து எறும்புகளும் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக செல்லும். எனவே, அவை தங்களின் வழித்தடத்தை உறுதிசெய்து கொண்டு, திரும்பி வரும் பொழுதும் அவ்வாறே இரசாயனத்தை உமிழ்ந்து கொண்டு செல்லும். இதனால், அவை வழி மாறாமல் பயணிக்கும். எதிராளி யாராவது வந்தால் கூட எளிதாக அவை அடையாளம் கண்டுவிடும். மேலும், அதை கூட்டமாக எதிர்கொள்ள இவற்றுக்கு அந்த இரசாயன வித்தை உதவும்.

எறும்புகள் தங்களுக்குள்ளான கருத்துப் பரிமாற்றத்தை ஒன்றுக்கொன்று மோதி, அல்லது தங்களின் கால்களை உரசி வெளிப்படுத்தும், சைகை மொழி போல. அவை, தங்களின் முகத்தில் இருக்கும் கொடுக்குகள் மூலமாக இரசாயனத்தை உமிழ்வதில் கூட, கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்துகின்றன.

எறும்புகள் மனித சமுதாயத்தினை போலவே குணாதிசயங்களை ஒத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித சமுதாயத்தினை போலவே எறும்புகளுக்கும் மன்னன், மகாராணி, அமைச்சர்கள், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எறும்புகள் தனது காலனி முகப்பில் காவலாளி எறும்புகளை நிறுத்தி வைத்திருக்கும். அது அங்கே வரும் ஒவ்வொரு எறும்புகளையும் முகர்ந்து பார்த்துவிட்டே தனது புற்றுக்குள் அனுமதிக்கும். எறும்புகள் தகவல் பரிமாற்றத்திற்கு, ‘ஃபெர்மோன்’ எனும் வேதிப்பொருளை பயன்படுத்துகிறது.

மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடல்களை மண்ணில் புதைத்து விடுகின்றன. தங்களின் அன்றாடப் பணிகளை சீராக பங்கிட்டு செயலாற்றுகின்றன. அவ்வப்போது ஒன்று கூடி மகிழ்கின்றன.

விமர்சனங்களுக்கு இளையராஜா கொடுத்த நச் பதில்... வைரலாகும் வீடியோ!

நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் (Nehru Institute of Mountaineering) வழங்கும் மலையேற்றப் பயிற்சிகள்!

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT