chinese water deer 
பசுமை / சுற்றுச்சூழல்

கோரைப் பற்கள் கொண்ட நீர் மான்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?

ஆர்.ஐஸ்வர்யா

நீர் மான்கள் உருவத்தில் கஸ்தூரிமானை போலவே சிறிதாக இருக்கும். இவை பெரும்பாலும் சீனா மற்றும் கொரியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவை. நீர் மான்கள் அழகான கண் கவர் விலங்குகளாகும். நீர் மான்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கொம்புகள் இல்லை: ஆண் சீன நீர் மான்களுக்கு கொம்புகள் இல்லை. அவற்றுக்குப் பதிலாக நீளமான கோரைப் பற்கள் உள்ளன. இதை பார்ப்பதற்கு தந்தங்கள் போலவே இருக்கும். சண்டையிடும் போதும் இனச் சேர்க்கை காலத்தின் போதும் இவற்றைப் பயன்படுத்தும்.

தனித்துவமான தோற்றம்: நீர் மான்கள் தடிமனான உடல்வாகு கொண்டவை. குறுகிய கால்கள் இருக்கும். பெரிய தலையுடன் ஒரு தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளன. இவற்றின் ரோமங்கள் பொதுவாக சிவப்பு, பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். சீன நீர் மான்கள் பல மான் இனங்களை விட சிறியதாக இருக்கும். வளர்ந்த மான்கள் பொதுவாக 40 முதல் 50 பவுண்டுகள் எடை இருக்கும்.

தனிமை விரும்பிகள்: பொதுவாக மான்கள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மையுடையது. ஆனால், இவை தனிமையில் அல்லது சிறிய குடும்பக் குழுக்களில் வாழ்கின்றன. பிற மான் இனங்களை விட குறைவான சமூகத் தன்மை கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. பெரும்பாலும் ஈர நிலங்களில், ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களுக்கு அருகில் வாழ்கின்றன. இவை நன்கு நீச்சல் அடிக்கக்கூடிய திறமை பெற்றவை.

இரவு நேர விலங்குகள்: இரவு மற்றும் அந்தி வேளைகளில் இவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். காடுகளில் இவற்றைத் தேடி கண்டுபிடித்தல் மிகவும் கடினமான காரியமாக இருக்கும். இவை தனித்துவமான குரல் வளம் கொண்டவை. முணுமுணுப்பது போலவும் விசில் அடிப்பது போலவும் குரல் கொடுக்கும்.

உணவு முறை: இவை தாவர வகைகள் அதாவது இலைகள், புல் மற்றும் நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன, அவற்றுக்கு விருப்பமான சதுப்பு நிலப் பகுதிகளில் ஏராளமான உணவு ஆதாரங்கள் இவற்றுக்குக் கிடைக்கின்றன.

கலாசார முக்கியத்துவம்: சீனாவில் இந்த வகையான மான்கள் கலாசார முக்கியத்துவம் பெற்றுள்ளன. பாரம்பரிய சீன கலை மற்றும் நாட்டுப்புற நிகழ்வுகளில் இவை தவறாமல் இடம்பெறுகின்றன.

வாழ்விடம்: இவற்றின் உடல்வாகு நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் உள்ளன. சேறு மற்றும் சதுப்பு நில பகுதிகளில் வாழ்வதற்கு ஏற்றவாறு இவற்றின் குளம்புகள் சிறப்பு அமைப்புகளுடன் உள்ளன. இதனால் இவை நீர்வாழ் தாவரங்கள் மற்றும் புற்களைத் தேடி உண்ண முடிகிறது. தங்களை வேட்டையாடுபவர்களிடம் தப்பித்து ஓடவும் இந்தக் குளம்புகள் உதவுகின்றன.

நீச்சல் வீரர்கள்: நரிகள், ஓநாய்கள் மற்றும் பெரிய மாமிச உண்ணிகள் உட்பட பல்வேறு வகையான விலங்குகள் நீர் மான்களை அச்சுறுத்துகின்றன. அதனால் அவை பல பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றன. பெரும்பாலும் தாம் வாழும் சூழலில் மரங்களினூடே தங்களை மறைத்துக்கொள்ள ஏற்றுவாறு ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கும். வேட்டையாடுபவர்கள் துரத்தும்போது சதுப்பு நிலங்கள் மற்றும் கால்வாய்கள் வழியாக தப்பிச் செல்ல நீச்சல் திறனை பயன்படுத்தி தப்பிக்கின்றன. தண்ணீரில் நன்றாக நீந்தக் கூடியவை இவை. ஒரு மணி நேரத்தில் பதினைந்து மைல் தூரம் நீந்தும்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT