Tree Man of India  
பசுமை / சுற்றுச்சூழல்

இந்தியாவின் மர மனிதன் யார் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

“மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்” என பள்ளிப் பருவத்தில் இருந்தே படித்து வருகிறோம். மரங்களின் தேவையை உணர்ந்து சத்தமில்லாமல் கடந்த 30 வருடங்களாக மர வளர்ப்பில் ஈடுபட்டு வரும் “இந்தியாவின் மர மனிதர்” பற்றி உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் அவர் யார் என்பதை இப்போது அறிந்து கொள்வோம்.

இயற்கையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டியது அவசியமாகும். நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் ஒரு மரத்தையாவது வளர்ப்பது, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமையாகும். அதிவேகமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் மரம் வளர்ப்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், பேருந்து நடத்துநராக பணிபுரியும் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்ப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு, தனது பயணத்தை இன்றும் தொடர்ந்து வருகிறார். இவரது இந்த சேவை தான் “இந்தியாவின் மர மனிதர்” என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. தன்னலமற்ற சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் தான் மாரிமுத்து யோகநாதன்.

கோவையில் மருதமலை - காந்திபுரம் இடையிலான S-26 பேருந்தில் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரியும் யோகநாதன், தனது சிறுவயதில் கோத்தகிரி காடுகளில் மரத்தடியில் கவிதைகள் எழுதும் பழக்கம் கொண்டவர். காடுகளில் மரங்களை வெட்டும் கும்பலுக்கு எதிராக போராடி வந்தார். மரங்களின் மீதான இவரது நேசம் அப்போதிருந்தே தொடங்கி விட்டது. மரங்களை நேசிக்கும் ஒருவரால் தானே மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க முடியும். தன்னுடைய மாதச் சம்பளத்தில் 40% தொகையை மரக்கன்றுகளை வாங்கி நடுவதற்கும், ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கும் செலவிட்டு வருகிறார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மரங்களை வெட்டுவதன் மூலம் உண்டாகும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

யோகநாதன், மரம் அறக்கட்டளையில் (Tree Trust) ஓர் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் மலையேற்றத்தின் மூலமாக மட்டுமே சுமார் 1,20,000 இலட்சம் மரங்களை நட்டு சுற்றுச்சூழலைக் காத்துள்ளார். 30 ஆண்டுகளில் மொத்தமாக 3,00,000 இலட்சம் மரக்கன்றுகளை வளர்த்துள்ளார். மரங்களை வளர்ப்பது மட்டுமின்றி, மற்றவர்களையும் மரங்களை வளர்க்க ஊக்குவித்து வருகிறார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இவரது சேவையைப் பாராட்டி தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் சேவை வீரர் விருது வழங்கப்பட்டது. மேலும் துணை ஜனாதிபதியிடம் இருந்து ECO Warrier விருது, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் சிறந்து விளங்கும் தேசிய இளைஞர் விருது, நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஶ்ரீ ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. விருதுகள் இவரை அலங்கரித்துது என்று சொல்வதைக் காட்டிலும், இவர் தான் விருதுகளை அலங்கரித்துள்ளார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

சமீபத்தில் சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை டெல்லியில் பாராட்டினார்கள். இந்த விழாவில் பாராட்டப்பட்ட ஒரே தமிழர் யோகநாதன் தான். அப்போது, “Tree Man of India, Bus Conductor” என ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அப்போது இவரது கைகளைப் பிடித்து பிரதமர் மோடி குலுக்கிய தருணத்தை என் வாழ்வில் மறக்கவே முடியாது என்று யோகநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

சுற்றுச்சூழலைக் காக்கும் பொருட்டு நாமும் நம்மால் முடிந்த வரையில் மரங்களை வளர்ப்போம். நம் வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான சுற்றுச்சூழலைச் விட்டுச் செல்வோம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT