விவசாயத்துக்குத் தேவையான புதிய மோட்டார் பம்பு செட்டுகளை வாங்க விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதைப் பெறுவதற்காக தற்போது விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், “சிறு குறு விவசாயிகளின் நலனைக் கருதி, மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பழைய பம்பு செட்டுகளை புதிய பம்பு செட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும், புதிய கிணறுகளுக்கு பம்பு செட்டு வாங்குபவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஆதி திராவிடர்களுக்கு கூடுதல் சலுகையும் வழங்கப்பட உள்ளது.
ஐந்து ஏக்கர் நிலம் உள்ள சிறு குறு விவசாயிகள் ஐயாயிரம் பேர் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். மேலும், பம்பு செட்டின் முழுத் தொகையிலிருந்து 50 சதவீதம் அல்லது 15,000 ரூபாய் மானியமாகக் கிடைக்கும். இதற்காக தமிழ்நாடு அரசு 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள், ‘உழவன்’ செயலி மூலமாகவோ அல்லது எம்.ஐ.எம்.ஐ.எஸ். இணையதளம் மூலமாகவோ அல்லது வருவாய் கோட்ட வேளாண் பொறியியல் அலுவலகம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் ஆதார் அடையாள அட்டை, சிறு குறு விவசாயச் சான்று, புகைப்படம், வங்கிக் கணக்கு முகப்புப் பக்கம், ஆதி திராவிடராக இருப்பின் சாதிச் சான்றிதழ், மின் இணைப்பு மற்றும் மோட்டார் பம்பு செட்டினுடைய உத்தேச விலை பட்டியல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.