Ice gets melting BBC Earth
பசுமை / சுற்றுச்சூழல்

அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகினால்… அச்சுறுத்தும் உண்மைகள்!

A.N.ராகுல்

கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கட்டிப் பிரதேசம் உறைந்த நீரின் பகுதிகளால் சூழப்பட்டது. இந்த பனிக்கட்டி பிரதேசங்கள் பூமியின் நன்னீரில்(Freshwater) மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கின்றன. மேலும் அவற்றின் இருப்புத் தன்மை நம் கிரகத்தின் காலநிலையுடன் பெரிதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. அண்டார்டிகா பனிக்கட்டி:

அண்டார்டிக்காவில் படர்ந்திருக்கும் பனிக்கட்டிகளானது பூமியில் மிகப்பெரிய அளவில் விரிந்து காணப்படும் பனிக்கட்டிகளாகும். இது உலகின் 60% நன்னீரை (Freshwater) மொத்தமாக உள்ளடக்கியுள்ளது. அது முழுவதுமாக உருகும் பட்சத்தில், உலக சராசரி கடல் மட்டம் 58 மீட்டர் அளவு வரை உயரக்கூடும்.

புவி வெப்பமடைவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதை தடுக்க எல்லா நாடுகளும் என்னதான் பல வழிகளை கையாண்டாலும், தொழிற்சாலைகளில் இருந்து செயற்கையாக வெளிப்படும் நச்சு புகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் தொழிற்சாலைகள் எல்லாம் நம் வாழ்வின் ஒர் அங்கமாக மாறிவிட்டன. ஆகையால் இதன் மொத்த தாக்கமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்த பிரதேசங்களை முற்றிலும் பாதிக்கிறது. விஞ்ஞானிகள் பல திட்டங்களைத் தீட்டினாலும் அங்கு நடக்கும் மாற்றங்களை தடுக்க சிரமப்படுகின்றனர்.

இன்று கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் பல ஒழுங்குமுறைகளை பின்பற்றினாலும், கடல்களில் கலக்கப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் வளிமண்டலத்தால் ஏற்கனவே உறிஞ்சப்பட்ட வெப்பம் காரணமாக கணிசமான பனி இழப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

2. கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள்

கிரீன்லாந்தின் பனிக்கட்டி பகுதிகளிலும் கணிசமான அளவு நன்னீர் உள்ளது. இதுவும் முழுவதுமாக உருகினால், உலக கடல் மட்டம் கணிசமாக உயர கூடும்.

துரிதப்படுத்தப்பட்ட உருகுதல்:

சமீபத்திய ஆய்வுகள், கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் ஆபத்தான விகிதத்தில் பனிகட்டிகள் உருகியுள்ளதை வெளிப்படுத்துகின்றன. 1990 களில் இருந்து, இந்த இரண்டு பகுதிகளிலும் ‘ 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள்’ நீரில் கரைந்துள்ளது. இது நம் உலகில் மொத்த கடல் மட்டம் உயர மூன்றில் ஒரு பங்குக்கான காரணமாக இருந்துள்ளது.

கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகளும் ஒரு வகையில் புவி வெப்பமடைதலை துரிதப்படுத்துகின்றன. அப்பகுதியில் காணப்படும் பரந்த அளவிலான பனிக்கட்டிகளின் விரிவாக்கம் கண்ணாடி போல் செயல்பட்டு விண்வெளியில் இருந்து வரும் சூரிய ஒளி மற்றும் கதிர்களை பூமியின் உள் அண்டவிடாமல் திருப்பி அனுப்பி விடும். இதனால் தான் நம் பூமியின் வெப்பநிலை ஓரளவு குறைவாக உள்ளது. ஆனால் இந்த பனிக்கட்டிகள் உருகும் பட்சத்தில், சூரிய ஒளி ஊடுருவுவதும் தடுக்கப்படாமல் பூமியின் வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும்.

3. உலகளாவிய விளைவுகள்

கடல் மட்ட உயர்வு: பனிக்கட்டிகள் உருகுவதன் உடனடி தாக்கம் கடல் மட்டம் உயர்வது தான். கடலோர நகரங்கள், தாழ்வான தீவுகள் மற்றும் மக்கள்தொகை அதிகமுள்ள டெல்டாக்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும். இதனால் உலகம் பேரழிவை சந்திக்க கூடும்.

இடம்பெயர்வு: நீரில் மூழ்கிய நிலத்தின் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர கூடும். இதனால் பண்டைய காலத்தில் நடந்த சில நிலஅபகரிப்புக்கான யுத்தங்கள் தலை தூக்கலாம்.

பொருளாதாரச் செலவுகள்: கடல் மட்ட உயர்வுக்கு நம் உள்கட்டமைப்புகளை மாற்றுவது நாம் செலவு செய்ய வேண்டிய விலை அதிகம். இழந்த சொத்துக்களை மீட்டெடுப்பது என்று இந்த சூழ்நிலைக்கு நம்மை மாற்றுவது ரொம்பவே கடினம்.

தீவிர வானிலை நிகழ்வுகள்: உருகும் பனிக்கட்டிகள் வானிலை வடிவங்களை முற்றிலும் பாதித்து விடும். இதன் காரணமாக புயல்கள், சூறாவளிகள் எதிர்பாராத நேரங்களில் பல இயற்கை பேரிடர்களை சந்திக்க நேரிடும்.

கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளின் மொத்த தலைவிதி மனிதகுலத்தின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. என்னதான் விஞ்ஞான வளர்ச்சியால் பல சவால்களை எதிர் கொண்டாலும், ஆராய்ச்சியில் முதலீடு செய்து பல தகவல்களை முன்கூட்டியே அறிந்தாலும், நம் மனிதகுலத்தின் ​​​​இன்றைய செயல்கள் எதிர்கால தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் தான் உள்ளன. இந்த பேரிடரை காலத்தால் தள்ளிப்போட முடியுமே ஒழிய முற்றிலும் தவிர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே!

விழித்திடுவோம்! உலகம் காப்போம்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT