பொதுவாகவே, பூக்கள் மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றின் மணம் மற்றும் அழகுக்காக அனைவராலும் விரும்பப்படுபவை. ரோஜா, மல்லி போன்ற மலர்கள் அதன் வாசனைக்காக மிகவும் விரும்பப்படுகின்றன. சில மலர்கள் அதன் விசித்திரமான அமைப்பால் மக்களைக் கவர்கின்றன. அப்படிப்பட்ட பூக்களில் குரங்கு பூ, ஹூக்கரின் உதடுகள் மற்றும் பிணப் பூ எனப்படும் ராட்சத சடல பூக்கள் குறிப்பிடத்தக்கவை.
குரங்கு பூ: தாவரங்களில் ஆர்க்கிட் பெரிய குடும்பம். இக்குடும்பத்தில் சுமார் 26,000 இனங்கள் உள்ளன. ஆர்க்கிட் பூக்களின் சிறப்பே கண்கவர் வண்ணங்களிலும், விதவிதமான உருவங்களிலும் இருப்பதுதான். தென் அமெரிக்க நாடுகளான பெரு, ஈக்வடார் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் மட்டுமே இந்த குரங்கு பூக்கள் காணப்படுகின்றன. ‘மங்கி ஆர்க்கிட்’ எனப்படும் இந்தப் பூ பார்ப்பதற்கு குரங்கின் முகம் போலவே காணப்படும்.
லூயர் எனும் தாவரவியல் அறிஞர்தான் இதற்கு, ‘மங்கி ஆர்கிட்’ எனப் பெயர் சூட்டினார். குரங்கு பூவில் சுமார் 120 வகைகள் உள்ளன. இளம் சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள் என்று வெவ்வேறு வண்ணங்களில் இவை காணப்பட்டாலும் உருவத்தில் இந்தப் பூக்கள் குரங்கு போன்றே காட்சி தருகின்றன.
இதனை ஆங்கிலத்தில் Dracula gigas அல்லது monkey orchid என்று அழைக்கிறார்கள். குரங்கு மலர் செடிகள் எதிரெதிர் பிரிக்கப்படாத இலைகளையும், தனித்த பூக்களையும் கொண்டவை. இவை ஈரமான பகுதிகளில் அதிகமாக வளரும்.
ஹூக்கரின் உதடுகள்: ஹூக்கர்ஸ் லிப் ஒரு வெப்ப மண்டல தாவரமாகும். இது மெக்ஸிகோ, ஈக்குவடார், பனாமா மற்றும் கொலம்பியாவில் காணப்படுகின்றன. இவை அமைப்பில் சிவந்த உதடுகளைப் போன்றது. இவை ஓவல் பெர்ரிகளாக இருக்கும் பழங்களைக் கொண்டுள்ளன. இவை முதிர்ச்சி அடையும்போது கருப்பு அல்லது நீல நிறமாக மாறும்.
பிணப் பூ: இந்த ராட்சத சடலப் பூக்கள் ஒரு வாரம் மட்டுமே பூக்கும். இவை இனிமையான மணம் இல்லாமல் துர்நாற்றம் வீசக்கூடியதாக உள்ளது. இப்பூவில் உள்ள பெரிய ஆரஞ்சு இதழ்கள் 3 முதல் 6 அடி வரை பரவக்கூடியது. உலகின் மிகப் பெரிய மலர் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்தப் பிணப் பூ.