albatross bird 
பசுமை / சுற்றுச்சூழல்

அதிர்ஷ்டப் பறவை அல்பட்ரோஸ் பற்றிய அரிய தகவல்கள்!

சேலம் சுபா

வாழும் காலத்தில் இனப்பெருக்க நாட்களைத் தவிர மற்ற நாட்கள் முழுவதும் நீரின் மேல் பறக்கும் அல்பட்ரோஸ் கடல் பறவைதான் உலகிலேயே நீளமான இறக்கைகள் கொண்ட பறவையாகும். இதனை பசிபிக், அண்டார்டிகா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதிகளிலும் காணலாம்.

டியோமேடியா என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த அல்பட்ரோஸ் பறவை உலகில் இருக்கும் பெரிய அளவு பறவைகளில் ஒன்றாகிறது. இப்பறவை தனது இறகுகளை விரித்தால், அதன் நீளம் 11 அடி இருக்கும். இதற்குக் குறைவான நீளம் கொண்ட அல்பட்ரோஸ் வகைகளும் உண்டு. இதன் இறக்கைகள் 3.7 மீட்டர் வரை விரியக்கூடியது என்பதாலேயே இதனால்  நீண்ட காலத்துக்குப் பறக்க முடிகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழக்கூடிய இப்பறவை காற்றின் ஓட்டத்தைப் பயன்படுத்தி டைனமிக் சோரிங் (Dynamic Soaring) எனும் பறக்கும் உத்தியை பயன்படுத்தி நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டவை. தனது நீண்ட இறக்கைகளை அடிக்காமல் அழகாக ஒரு க்ளைடர் பறப்பது போல விண்ணில் பறப்பது ஆச்சரியம். இவற்றுக்கான உணவும் கடலிலேயே கிடைத்துவிடுகிறது. அல்பட்ரோஸ் பறவைகள் பறக்கும்போதே தூங்கும் பழக்கமும் கொண்டவை என்கின்றனர். ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஆல்பட்ரோஸ் பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையுடன் மட்டுமே இணையும் என்பதுதான். அல்பட்ரோஸ் ஒவ்வொரு இனச்சேர்க்கை காலத்திலும் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும். இனப்பெருக்க காலம் என்பது ஓராண்டுக்கும் மேல் நிலைக்கும். அந்த நாட்கள் முழுவதுமே அப்பறவைகள் தரையில்தான் இருக்கும். முட்டையிடும் வரை  ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ளும். ஆண் மற்றும் பெண் பறவைகள் பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டு, மாறி மாறி அவற்றை அடைகாக்கும். ஒரு பறவை அடைகாக்கும்போது மற்றொன்று உணவு சேகரிக்கும். குஞ்சு பொரித்த பின் இரண்டு பறவைகளும் சேர்ந்து குஞ்சுக்காக உணவு தேடும். குஞ்சு வளர்ந்து பறக்கத் துவங்கும் வரை இரண்டு பறவைகளும் அங்கே  இருக்கும்.

அதன் பிறகு இரு பறவைகளும் பிரிந்து சென்றுவிடும். அடுத்த இனப்பெருக்க காலம் வரை அவை ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளாது. இனப்பெருக்கம் காரணமாக மட்டுமே சுமார் ஒரு வருட காலம் தரையில் இருந்து ஒற்றைக் குஞ்சு பொரித்து அந்தக் குஞ்சு தனியே பறக்கும் வரை காவலாக இருந்து பின் மீண்டும் கடலை நோக்கிப் பறந்து விடுகிறது இப்பறவைகள். ஒரு முறை ஒரு குஞ்சு மட்டுமே என்ற காரணத்தால் 22 அல்பட்ரோஸ் இனங்களில் 21 இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். இனப்பெருக்கம் காலம் தவிர, வாழ்வின் பெரும் காலத்தை தனியாகவேதான் இந்தப் பறவைகள் கழிக்கும்.

உலகின் சரிபாதி பசிபிக் கடல்தான் என்பதால் பெரும்பாலும் இது பசிபிக் சமுத்திரத்தின் மேல்தான் பறக்கும். கப்பலை இயக்கும் மாலுமிகளுக்கு அல்பட்ராஸ் பறவை ஒரு அதிர்ஷ்டப் பறவை என்ற நம்பிக்கையும் உண்டு.

கடல் மீது பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் இந்த அதிர்ஷ்டப் பறவைகளைக் கண்டு மகிழலாம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT