Mango farming
Mango farming 
பசுமை / சுற்றுச்சூழல்

மா உற்பத்தியில் மகசூலை அதிகரிக்கும் உத்திகள்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் மாம்பழத்தின் சீசன் தற்போது தொடங்கிவிட்டது. உலகளவில் 65 சதவிகித மா உற்பத்தி இந்தியாவில் செய்யப்படுகிறது. மா ஒரு பல்லாண்டு பயிர் என்பதால், ரகத் தேர்வு மிகவும் முக்கியமானது. தேவைக்கேற்ப ரகத்தை தேர்வு செய்யவேண்டும். பொதுவாக தட்பவெப்பநிலை, நிலத்தின் தன்மை (களர்/உவர்) மற்றும் நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர் மற்றும் ரகம் தேர்வு செய்யலாம்.

சாகுபடிக்குத் தேர்வு செய்யப்படும் பகுதி:

சாகுபடிக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் நிலவும் தட்பவெப்பநிலை, மழையளவு மற்றும் மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து அந்த இடம் மா சாகுபடிக்கு உகந்ததா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் மா வெப்பமண்டல பகுதிகளில்தான் சாகுபடி செய்யப்படுகிறது. மா சாகுபடிக்கு மணல் கலந்த தோமிலி மண் ஏற்றது. களி மண் அதிகப்படியான மணற்பாங்கான நிலம் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலங்களைத் தவிர்க்கவேண்டும். 

கன்றுகளை அரசு மற்றும் பல்கலைக் கழக நர்சரிகளிலிருந்து வாங்குவது நல்லது. அரசு அங்கீகாரம் பெற்ற நர்சரியில் இருந்தும் கன்றுகளை வாங்கலாம். நடும் பருவகாலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, கன்றுகளை வாங்கி நிழலில் வைத்து பின்னர் நடவுக்குப் பயன்படுத்தலாம்.

நடவு:

குறைவான மழை பொழியும் இடங்களில், மழை தொடங்குதற்கு முன்பே நடவு செய்யலாம். அதிக மழை பொழியும் இடங்களில் மழைக்குப் பின்னர் நடவு செய்யலாம்.

நீர் மேலாண்மை:

மாவிற்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நவீன தொழில்நுட்பமான சொட்டுநீர் பாசன முறையைப் பின்பற்றுவோர் நீருடன் உரங்களையும் கலந்து பாய்ச்சலாம்.

களை மேலாண்மை:

களைக்கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் களையினைக் கட்டுப்படுத்த முடியும். தவிர ஆட்களைக் கொண்டும், டிராக்டர்களை கொண்டும் இடை உழவு செய்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும், மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமளிப்பது சாலச் சிறந்தது.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை:

மாமரங்களில் பொதுவாக தத்துப்பூச்சித் தண்டு துளைப்பான், பழ ஈ மற்றும் பழ வண்டு போன்ற பூச்சிகள் தாக்கி சேதப்படுத்தும். தத்துப்பூச்சிகளை அசிபேட் பாசலோன் கார்பைரில் போன்ற பூச்சி மருந்துகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல்:

பொதுவாக மாம்பழங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறுவடைக்கு வரும். அறுவடையின்போது பழத்திற்கு எந்தவிதச் சேதமும் இல்லாமல் அறுவடை செய்தல் வேண்டும்.

விவசாயி பாபு

டந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மா உற்பத்தியில் அனுபவம் பெற்ற திருவள்ளூர் மாவட்டம், தோக்கமூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாபு அவர்களை கல்கி ஆன்லைன் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், ‘மா உற்பத்தியில் மகசூலை அதிகரிப்பதில் மட்டுமின்றி, விற்பனை செய்யவும் கற்றுக் கொண்டால் நல்ல இலாபம் பார்க்கலாம்’ என்றார்.  மேலும் விளக்குகையில் அவர் கூறிய தகவல்கள்: “விவசாயிகள் பலரும் விற்பனை செய்யத் தயங்குகிறார்கள். விவசாயிகள் நேரடி விற்பனையில் இறங்கினால், மாம்பழங்கள் குறைந்த விலைக்கே பொதுமக்களுக்கு கிடைக்கும்.  நான் மா உற்பத்தியில் ஈடுபடுவது மட்டுமின்றி, தினந்தோறும் இரயிலில் பயணம் செய்து, சென்னையில் மாம்பழங்களை விற்று வருகிறேன். இவ்வாறு நானே நேரடி விற்பனை செய்வதால் எனக்கான இலாபமும் அதிகமாக கிடைக்கிறது. மாம்பழ விற்பனை மட்டுமல்ல, தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விளைபொருட்களையும் விவசாயிகள் அனைவரும் தாங்களே முன்வந்து விற்பனை செய்தால் மட்டுமே, விவசாயிகளின் நிலை மாறும்.”

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

SCROLL FOR NEXT