ஸ்வீடன் நாட்டில் சிக்லா என்ற பகுதி முழுமையும் மரக்கட்டுமாணத்தால் அமைய உள்ளது. இதற்கு ஆதரவு மற்றும் எதிரான கருத்துக்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.
உலகமய வளர்ச்சி காடுகள் அழிவிற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் 70 சதவீதம் காடுகளால் சூழப்பட்டுள்ள ஸ்வீடன் நாடு மரங்களால் ஆன நகரத்தை அமைக்க திட்டமிட்டு அதற்கான செயல்பாட்டை தொடங்கி இருக்கிறது. ஸ்வீடன் நாட்டின் சார்ட்ஹோம் நகரத்தின் சிக்லா என்ற பகுதியில் ஒட்டுமொத்த கட்டுமானத்தையும் மரத்தால் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாகவும், மேலும் எளிதில் தீப்பற்றாத மரப் பலகைகள் இதில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், அது மட்டும் அல்லாது இவ்வாறான கட்டிடங்கள் கார்பன்-டை-ஆக்சைடை சேமித்து உமிழ்வு தன்மையை கட்டுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கட்டுமானங்களில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சுகாதாரமான காற்றோட்டத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் கல்கள் மற்றும் இரும்புகள் தேவை பெருமளவில் குறையும் என்று கூறப்பட்டிருக்கிறது. உள்நாட்டுல் அதிகம் கிடைக்கும் பொருட்களை வைத்து கட்டுமான பணியை மேற்கொள்வது பெருமளவிலான செலவை குறைக்கும் வழியாகவும் உள்ளது.
இது ஒரு வகையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை தான் என்றாலும், மற்றொரு வகையில் காடுகள் பெருமளவும் இதற்காக அழிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
உலகின் பெரும்பகுதி நாடுகள் காடுகளை மிக வேகமாக அளிக்க தொடங்கி இருக்கின்றன. அதனால் காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் ஸ்வீடன் நாடும் கட்டுமானத்திற்காக காடுகளை அதிகம் அழிக்க நேரிடும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.