இன்றைய நவீன உலகில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் மறுசுழற்சி என்பது நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு மிக முக்கியமான நடைமுறையாகும். மறுசுழற்சி என்பது வளங்களைப் பாதுகாக்கவும், கழிவுகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழலில் மனிதர்களின் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கவும் பெரிதளவில் உதவுகிறது. எனவே இப்பதிவில ரீசைக்கிளிங் நடைமுறையால் சுற்றுச்சூழலில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்: நமது பூமியின் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் மறுசுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி மற்றும் உலோகம் போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம், மரங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் தாதுக்களைப் பயன்படுத்துவதன் தேவையைக் குறைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு டன் காகிதத்தை மறுசுழற்சி செய்தால் தோராயமாக 17 மரங்கள், 7000 கேலன் தண்ணீர் மற்றும் 350 கேலன் கச்சா எண்ணெய் சேமிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது. மறுசுழற்சி செய்வது மூலமாக எதிர்காலத்திற்கு இத்தகைய வளங்களை நாம் பாதுகாக்க முடியும்.
குறைந்த ஆற்றல் மற்றும் கிரீன் ஹவுஸ் வாயு வெளியேற்றம்: மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது. மேலும் மறுசுழற்சி செய்வதால் குறைவான கிரீன்ஹவுஸ் வாயுவே வெளியேறுகிறது. உதாரணத்திற்கு அலுமினியம் கேன்களை மறுசுழற்சி செய்வதால், புதிய கேன்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஆற்றலில் 95 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டில் கார்பன் வெளியேற்றம் வெகுவாகக் குறைகிறது.
குறையும் நிலக்கழிவு: குப்பைகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, அவை மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. மறுசுழற்சி செய்வதன் மூலம் குப்பைத்தொட்டிகளில் அதிகம் சேரும் நிலக்கழிவுகள் குறைகிறது. இதன் மூலமாக தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றமும் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
மேம்படும் பொருளாதாரம்: மறுசுழற்சி என்பது அது செய்யப்படும் இடத்தின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கமாகும். தொடர்ச்சியாக ஒரு பொருள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்போது, இது ஒரு க்ளோஸ்டு லூப் அமைப்பை உருவாக்கி, முக்கிய வளங்களை நம்பி இருப்பதைக் குறைக்கிறது.
இப்படி பல்வேறு வழிகளில் மறுசுழற்சி நமக்கும் நம் சுற்றுச் சூழலுக்கும் பெரிய அளவில் நன்மை செய்கிறது. எனவே இனி அனைவருமே மறுசுழற்சி என்ற ஒரு விஷயத்தைக் கருத்தில் கொண்டு, குப்பைகளை தனித்தனியாக பிரித்து வெளியே போடுங்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் இருக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துங்கள்.