'கேரளா' என்றதும் உடனே நினைவிற்கு வருவது பச்சைப்பசேல் என்றிருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுதான். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் கேரளாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம்தான் வயநாடு. இங்கே கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி அதீத மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்கு முன் இங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும், இந்த அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கேரளாவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவிற்கான காரணம் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் நிலச்சரிவு என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம். கற்கள், மணல் போன்றவை மேடான பகுதியிலிருந்து புவியீர்ப்பு விசை காரணமாக சரிந்து விழும் நிகழ்வையே நிலச்சரிவு என்கிறார்கள். இதனால் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஆகியவை நிகழும். இந்த நிகழ்வு படிப்படியாகவும் நடக்கும் அல்லது கண் இமைக்கும் நேரத்திலும் நடந்து முடிந்துவிடக்கூடும்.
நிலச்சரிவு ஏற்படுவதற்கான முக்கியக் காரணம், அதிகப்படியான மழைப்பொழிவு, நிலநடுக்கம், காடுகளை அழிப்பது, காடுகள் இருந்த இடத்தில் வீடுகள் கட்டுவது போன்ற மனிதர்களின் செயலாலும் நிகழ்கிறது. இந்தியாவில் நிலச்சரிவு பெரிதும் மழைக் காலங்களிலேயே நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலச்சரிவை தடுக்க வேண்டும் என்றால், நிலத்தில் சரியான முறையில் வடிகால் அமைப்பது மண் சரிவை தடுக்கும். இதுபோன்ற சமயங்களில்தான் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். அதிகமாக மரங்களை நடுவது மிகவும் அவசியமாகும். நிலச்சரிவு நடக்கக்கூடிய மலைப்பகுதிகளில் வீடுகளைக் கட்டாமல் இருப்பது சிறந்தது.
இதற்கு நடுவே, கேரள அரசுக்கு மத்திய அரசு 7 நாட்களுக்கு முன்னதாகவே அதிக மழைப்பொழிவை பற்றியும், நிலச்சரிவை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
முன்டக்கை, சூரல்மாலா, அட்டாமாலா போன்ற இடங்கள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு இந்த நிகழ்வே மிகவும் மோசமான இயற்கைப் பேரிடராகக் கருதப்படுகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ வேண்டுமே தவிர, அதை எதிர்த்தோ அல்லது அழித்தோ வாழ நினைத்தால் இதுபோன்ற பேரிடர்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடமாகும்.