Farmers 
பசுமை / சுற்றுச்சூழல்

பாம்புக்கடியில் இருந்து தப்பிக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?

ரா.வ.பாலகிருஷ்ணன்

விவசாயிகள் வயல்களில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பொதுவாக பகலில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இரவில் தான் பெரும்பாலும் பாம்புக் கடியினால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து தப்பிக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என இப்போது பார்ப்போம்.

வயல்களில் விவசாயிகளுக்கு பெருந்தொல்லையாக இருப்பவை எலிகள். இந்த எலிகளை வேட்டையாடி, விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பாம்புகள் தான் சில சமயங்களில் எதிராளியாகவும் மாறி விடுகின்றன. ஆம், இரவு நேரங்களில் வயல்வெளிக்கு செல்லும் போது, சுருண்டு படுத்திருக்கும் பாம்பின் மேல் தெரியாமல் விவசாயிகளின் கால் பட்டு விட்டால், அவை உடனே கடித்து விடும். இது எதிர்பாராமல் நடக்கும் விபத்து தான் என்றாலும், விவசாயிகள் கவனமாக இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது தான் நல்லது.

பொதுவாக அதிகாலை நேரங்களில் தான் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். அப்போது தான் ஈரப்பதம் அதிக நேரத்திற்கு நிலைத்திருக்கும். மேலும் சிலர் இரவு நேரத்திலும் தண்ணீர் பாய்ச்ச வயலுக்கு செல்வார்கள். இச்சமயங்களில் தான் விவசாயிகள் பாம்புக் கடிக்கு ஆளாகின்றனர். இப்படி பல சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. வயல்களில் பாம்புகள் இருப்பது நன்மை தான் என்றாலும், இதுமாதிரியான சம்பவங்கள் நிகழும் போது விவசாயிகளுக்குத் தான் வேதனை அதிகம்.

அதிக நஞ்சுள்ள பாம்புகள் என்றால் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி விடும். ஆகையால் இரவிலோ அல்லது அதிகாலையிலோ வயலுக்குச் செல்லும் விவசாயிகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் பாம்புக் கடியில் இருந்து தப்பிக்கலாம். பாம்புகள் யாரையும் வேண்டுமென்றே கடிப்பது கிடையாது; அதேபோல் விவசாயிகளும் பாம்புகளை வேண்டுமென்றே மிதிப்பதும் கிடையாது.

வழிமுறைகள்:

பொதுவாக உணவளிக்கும் பூமியில் விவசாயிகள் செருப்பு போட மாட்டார்கள். இருப்பினும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் விவசாயிகள் வயல்களுக்குச் செல்லும் போது மட்டும் தற்காப்புக்காக நீளமான சூ மாடல் செருப்பை அணிந்து கொள்வது நல்லது.

நீண்ட தொலைவுக்கு அதிக வெளிச்சம் தரக் கூடிய டார்ச் லைட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

வயல் வரப்புகளில் நடந்து செல்லும் போது கம்பு அல்லது தடியால் தரையைத் தட்டிப் பார்த்துக் கொண்டே நடக்கலாம்.

மேலும், வளர்ப்பு நாய்களுடன் வயலுக்கு நடந்து செல்வது பாதுகாப்பான உணர்வைத் தரும்.

வயலில் எலித்தொல்லையைக் கட்டுப்படுத்த T வடிவ பறவைத் தாங்கிகளைப் பயன்படுத்தலாம். ஒருவேளை எலிகள் வயலில் இல்லையெனில் பாம்புகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கும்.

விவசாயிகள் இரவில் வயலுக்குச் செல்லும் போது அலட்சியமாக இருக்க வேண்டாம். பாதுகாப்பை மனதில் வைத்து எச்சரிக்கையாக செயல்பட்டால் பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க முடியும். இதையும் மீறி பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இப்போது அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான பாம்புக் கடிகளுக்கும் விஷமுறிவு மருந்து இருக்கிறது.

அதிகமாக டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!

மூட்டு வலி மற்றும் வீக்கத்துக்கு முடிவு கட்ட முன்னெடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!

நிலவின் வெப்பநிலை சரிந்தது எப்படி தெரியுமா?

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

SCROLL FOR NEXT