பண்டிகைகளும் உணவுகளும் நம் கலாச்சாரத்துடன் இணைந்தவை. கேரள மக்களின் சுவையான சைவ உணவுகள் நாவில் நீர் சுரக்க செய்துவிடும். அவற்றில் கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத சில சுவையான சைவ உணவுகளை பார்க்கலாம்.
1) ஓலன்:
வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி, சிவப்பு பீன்ஸ் ஆகியவற்றுடன் பச்சை மிளகாய் கீறி போட்டு தேங்காய் பால் விட்டு வேக வைத்து தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சமைக்கும் உணவு இது.
2) இடியாப்பம்:
ஆவியில் வேகவைத்த இடியாப்பம் என்பது இங்கு காலை உணவாக உண்ணப்படும் முக்கிய உணவாகும். இதற்கு சுவையான தேங்காய்ப்பால், கடலைக்கறி பரிமாறப்படும்.
3) புட்டு கடலைக் கறி:
இது கேரள உணவில் முக்கிய பங்கு வகிக்கும் உணவாகும். கருப்புகொண்டைக்கடலையை ஊற வைத்து வேக விட்டு மசாலாக்கள் சேர்த்து சுவையாக சமைக்கப்படும் கடலைக்கறி புட்டு, ஆப்பம் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது.
4) எரிசேரி :
வாழைக்காய், சேனைக்கிழங்கு அல்லது பூசணிக்காய், பயறுடன் சேர்த்து வேகவிட்டு தேங்காய், மிளகு, சீரகம் ஹை உள்ளஅரைத்து சேர்க்கப்படும் சுவையான எரிசேரி பண்டிகை நாட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
5) தோரன்:
பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகளை சிறியதாக நறுக்கி தேங்காய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து சமைக்கப்படுவது தோரனாகும்.
6) அவியல்:
காய்கறிகளின் கலவையுடன் நறுக்கிய மாங்காய்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து தயிர் கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை தான் அவியல்.
7) பழம் பொரி:
நேந்திரம் பழத்தை தோல் சீவி நீளமாக நறுக்கி மைதா மாவு, மஞ்சள் பொடி, ஒரு சிமிட்டு உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்த மாவில் வாழைப்பழத்தை முக்கி எண்ணெயில் பக்குவமாய் பொரித்தெடுப்பது பழம் பொரி.
8) உன்னியப்பம்:
மிருதுவான, மிகவும் மென்மையான, பஞ்சு போன்ற அப்பம் கேரளாவின் ஸ்பெஷல். அரிசியுடன் தேங்காய், வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அரைத்து செய்யப்படும் அப்பம் மிகவும் சுவையான சிற்றுண்டி ஆகும்.
9) அட பிரதமன்:
கேரளாவின் ஸ்பெஷல் பாயசம் இது பச்சரிசி அடைத்துண்டுகள் ரெடிமேடாக கடைகளிலும் கிடைக்கிறது, தேங்காய்ப் பால், வெல்லம், முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் பாரம்பரியமான சுவை மிக்க பாயசம்.
10) புளி இஞ்சி:
இஞ்சி, புளிக்கரைசல், உப்பு, பச்சை மிளகாய், காரப்பொடி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் சுவையான இஞ்சி கறி புளிப்பு காரம் இனிப்பு என எல்லாவித சுவையுடனும் அருமையாக இருக்கும்.