இப்போது முட்டையும் சைவம் என்ற நோக்கிலே தினம் ஒரு முட்டையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று புரதச்சத்து மிகுந்த முட்டை உணவுகளை பலரும் விரும்புகின்றனர். முட்டை விரும்பிகளுக்காக இங்கு முட்டை கட்லெட் கிரேவி மற்றும் கீறி முட்டை பிரட்டல் ரெசிபிகள்...
முட்டை கட்லெட் கிரேவி
தேவை:
முட்டை - 6
பூண்டு - 7 பல்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் -2
தக்காளி - 3
கேரட் துருவல் - அரை கப் பொட்டுக்கடலை மாவு - கால் கப்
மிளகாய் - 6
இஞ்சி -சிறு துண்டு
சோம்பு -கால் டீஸ்பூன்
தனியா -2 டீஸ்பூன்
கசகசா -2 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிது நல்லெண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
இஞ்சி பூண்டு தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். மிளகாயை வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். அதேபோல் மசாலா சாமான்களை தனியாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முட்டையை நன்றாக அடித்து அத்துடன் தேவையான உப்பு, கேரட் துருவல், பொட்டுக்கடலை மாவு, சிறிது அரைத்த மிளகாய் விழுது (அல்லது மிளகாய்த்தூள்) இவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி நெய் தடவிய சிறு கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பின் அவற்றை தனியாக கிண்ணத்திலிருந்து எடுத்து வைக்கவும்.
ஒரு அடி கனமான கடாயில் தேவையான நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். வாசம் வந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி இவற்றைப் போட்டு வெங்காயம் பொன்னிறமாக வதங்கும்வரை வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா சாமான்கள் மற்றும் மிளகாய்விழுது, உப்பு, மஞ்சள் தூள் போட்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு சற்று நீர் சுண்டும் வரை 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கட்லெட்டுகளை அதில் போட்டு கொத்தமல்லி தழை தூவி அரை மணி நேரம் ஊறவைத்து மூடி வைக்கவும் இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, தோசை புரோட்டாவுக்கு சூப்பர் டிஷ் ஆக அமையும்.
முட்டை பிரட்டல்
தேவை:
முட்டை - ஆறு
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சின்னவெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகாய் வற்றல்- ஐந்து
சீரகம் - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
மிளகாய் வற்றல், சீரகம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை எல்லாவற்றையும் வெறும் சட்டியில் வறுத்து தூள் செய்து மஞ்சள், உப்பு தூளையும் அதனுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை வேகவைத்து உரித்து பாதியாக வெட்டாமல் நீளவாக்கில் நான்கு இடங்களில் மட்டும் கீறிக்கொண்டு அதில் தூள் செய்த பொடியை வைத்து அடைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உரித்த வெங்காயத்தை நன்றாக வதக்கி அதில் முட்டைகளை போட்டு உடையாமல் இரண்டு பிரட்டுப் பிரட்டி இறக்கவும். தேவைப்பட்டால் மேலே மிளகுத்தூளை தூவிக் கொள்ளலாம்.இது குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் டிஷ்.