எப்போதும் டிபன் என்றாலே இட்லி, தோசை, பூரி, பொங்கல் தான். வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்றால் என்ன செய்வது எனத் தெரிவதில்லை. ஆனால் ஒரு முறை காலை டிபனுக்கு இந்த சுவையான ஆரோக்கியம் நிறைந்த மசாலா ஆப்பம் முயற்சித்துப் பாருங்கள். தினசரி எங்களுக்கு இதையே செய்து தாருங்கள் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கேட்பார்கள். இந்த மசாலா ஆப்பம் பஞ்சு போல மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
ஆப்ப மாவு - 2 கப்
தேங்காய் - துருவியது 2 ஸ்பூன்
எண்ணெய் - சிறிய அளவு
சீரகம் - ½ ஸ்பூன்
சோம்பு - ½ ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அந்த கலவையை ஆப்ப மாவில் சேர்த்து கலக்க வேண்டும்.
பிறகு ஆப்பம் சுடுவதற்காகவே இருக்கும் பிரத்தியேக ஆப்பக் கடாயில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து, அது சூடானதும் ஆப்ப மாவை ஊற்றி சுற்றிலும் பரவும்படி செய்ய வேண்டும். பின்னர் ஆப்பத்தை சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக வையுங்கள்.
சில நிமிடங்கள் கழித்து ஆப்பத்தை திருப்பி போட்டு வேக விட வேண்டும். பின்னர் ஆப்பம் நன்றாக வெந்ததும், வெளியே எடுத்தால் சூப்பர் சுவையில் மசாலா ஆப்பம் ரெடி.