உணவு / சமையல்

மாயம் செய்யும் மிளகு சீரகம்!

மங்கையர் மலர்

ளிகை சாமான்கள் வாங்கியவுடன் அரை ஆழாக்கு மிளகு, அரை ஆழாக்கு சீரகம் இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடி செய்து ஒருடப்பாவில் போட்டு விடுங்கள். இதை வைத்துக்கொண்டு தினசரித் தேவைகளுக்கு மாயாஜால வித்தைகளைச் செய்யலாம்.

1. பொங்கலுக்குத் தாளிக்கும்பொழுது நெய்யில் இந்தப் பொடியை வறுத்துப் போடுங்கள். மிளகைப் பொறுக்க ஆளும் வேண்டாம். ஜீரணத்துக்கு உதவும் மிளகைப் பொறுக்கி எறியவும் வேண்டாம். மிளகைக் கடித்துவிட்டு காரம் என்று குழந்தைகள் அலறவும் மாட்டார்கள்.

2. ரண்டு ப்ரெட் ஸ்லைசுகளுக்கு நடுவில் சிறிது சீஸ் தூவிக்கொண்டு, மேலே மிளகு சீரகப் பொடியில் இரண்டு சிட்டிகை உப்பைக் கலந்து தூவிக்கொண்டு சாண்ட்விச் செய்தால் மாறுபட்ட ருசிதான்.

3. மாலையில் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு டி.வி. பார்க்க அவசரம், கதை புத்தகம் படிக்க வேண்டும். ‘டிபன் சாப்பிடவில்லையே’ என்று உங்களுக்கு ஆதங்கம். இலுப்புச் சட்டியில் ஒரு கரண்டி நெய்யைவிட்டு, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டு பொரிந்தவுடன் ப்ரெட்டை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இறக்குவதற்கு முன்பு சிறிது உப்பையும் தூவிக் கிளறிவிடுங்கள். ஒரு கிண்ணத்தில் இந்தத் துண்டுகளைப் போட்டு ஒரு போர்க் (Fork) போட்டு குழந்தையின் கையில் கொடுத்தால் டீ.வி சுவாரஸ்யத்தோடு ப்ரெட் போன இடம் தெரியாமல் வயிற்றுக்குள் போய்விடாதா.

4. க்காளி சாதம் என்ன செய்தாலும் சிறிது சப்பென்றுதான் இருக்கும். தாளிக்கம்போது இந்த மிளகு சீரகப் பொடியையும் தாளித்துக் கிளறிவிடுங்கள். வாய்க்குத் தனியான விறுவிறுப்புதான்.

5.ஃப்ரிட்ஜில்  வைத்து சில்லென்று இருக்கும் தக்காளி, அன்னாசி ஜூஸ்களைப் பருகும்பொழுது இந்தப் பொடியில் ¼ ஸ்பூன் போட்டுக் கலக்கிவிடுங்கள். சில்லிப்பும் காரமும் கலக்கும்போது ஏற்படும் சுவையே அலாதி.

6. ரிசி உப்புமாவுக்குத் தாளிதம் செய்யும்பொழுது மிளகாய் வற்றலுக்குப் பதில் இந்தப் பொடியைப் போட்டுச் சிறிது கேரட், பீன்ஸ், வேக வைத்த பட்டாணி இவற்றை வதக்கிக்கொண்டு உப்புமா செய்யுங்கள். இந்த ‘ஆஸ்தான வித்வான்’ டிபனுக்குக்கூட எவ்வளவு டிமாண்ட் இருக்கும் தெரியுமா? வேண்டுமானால் ‘ரைஸ் புட்டிங்’ என்று பெயரை மாற்றிக் கொள்வோம்.

7. தோசை மாவு புளித்துவிட்டதா? கவலையை விடுங்கள். இந்தப் பொடியில் 2 ஸ்பூன் போட்டுச் சிறிது உப்பையும் சமையல் சோடாவையும் போட்டு நன்றாகக் கலக்கிவிட்டு சற்று தடிமாக தோசை வார்த்து விடுங்கள். சரியாகிவிடும்.

8. க்காளி ரசமோ, பருப்பு ரசமோ, எலுமிச்சை ரசமோ எதுவானாலும் கொதித்து வரும்போது இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டு ஒரு கொதி வந்தவுடன் தண்ணீர் ஊற்றி நுரைத்துவரும்போது கொத்துமல்லித் தழையைத் தூவுங்கள். அப்புறம் யாராவது உங்கள் ரசத்தை வெந்நீர் என்று சொன்னால் வழக்கு போடலாம்.

9. சூப் செய்யும்போது இந்தப் பொடியைப் போட்டு மேலாக ஒரு ஸ்பூன் நெய்யையும் ஊற்றினால் சுவையாக இருக்கும்.

10. ருளை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை ரோஸ்ட் செய்யும்பொழுது மிளகாய்த் தூளுக்குப் பதிலாக மிளகு சீரகப் பொடியைச் சேர்த்தால் சுவையும் மாறுபட்டு இருக்கும். வாயுத் தொல்லையும் இருக்காது.

11. மாலையில் பார்ட்டியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம் இரவில் தன் வேலையைக் காட்டுகிறதா? நல்ல சூடான வெந்நீரில் மிளகு சீரகப் பொடியை ஒரு ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுங்கள். குழந்தை இருமல் நீங்கி நிம்மதியாக தூங்கும்.

பீட்ரூட் இலைகளைப் பயன்படுத்தியே உடல் எடையை குறைக்கலாமே! 

காகங்கள் தலையைத் திருப்பி ஒரு கண்ணால் பார்ப்பது ஏன் தெரியுமா?

தடுமாறும் பதின் பருவப் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?

ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் - கொய்யா சட்னி செய்யலாமா?

Nudge technique - நீல நிற விளக்குகளால் தற்கொலையைத் தடுக்க முடியுமா?

SCROLL FOR NEXT