தொகுப்பு: வசந்தா கோகிலம், மும்பை
வெயில் காலம் தொபங்கிவிட்டது. விதவிதமான வடாம் செய்து காயவைத்து பத்திரப்படுத்தினால் வருடம் முழுவதும் பொரித்துச் சுவைக்கலாம்.
ராகி வடாம்
ராகியைச் சுத்தம் செய்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அத்துடன் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துப் புளிக்க வைக்க வேண்டும். மறுநாள் மாவுடன் ஓமம் அல்லது எள் சேர்த்து வடாம் தட்டில் பரப்பி ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் வெயிலில் காயவைத்து எடுக்கவும். வடாம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சோள வடாம்
சோளத்தை சுமார் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மையாக அரைத்து உப்பு கலந்து இரவு முழுவதும் வைத்திருந்தால் காலையில் புளித்துவிடும். அந்த மாவுடன் விழுதாக அரைத்த பச்சை மிளகாய், சீரகம் போட்டுக் கலக்கவும். வடாம் தட்டில் எண்ணெய் தடவி அதில் அரைத்த மாவை மெல்லிய வட்டமாகத் தடவி ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். ஆறியதும் வடாமை எடுத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தவும்.
வாழைத்தண்டு வடாம்
குக்கர் பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அத்துடன் அரைத்த மிளகாய் விழுது, உப்பு சேர்த்து அரிசி மாவைக் கொட்டி நன்றாகக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூடு ஆறியதும் எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி வைத்து வெயிலில் நன்றாகக் காயவைத்து பத்திரப்படுத்தவும். வாழைத்தண்டுக்கு பதிலாக வெங்காயம் சேர்த்து, வெங்காய கருவடாம் செய்யலாம்.
தினை அரிசி வடாம்
தினை அரிசியை ஊறவைத்து அத்துடன் மிளகு, உப்பு சேர்த்து அரைத்துப் புளிக்க வைக்க வேண்டும். மறுநாள் மாவுடன் சீரகம் சேர்த்துக் கலந்து வடாம் தட்டில் பரப்பி ஆவியில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். ஆறியதும் எடுத்து வெயிலில் காய வைக்கவும்.
கோதுமை வடாம்
கோதுமை ரவையை ஊறவைத்து அரைத்து அத்துடன் பச்சை மிளகாய் விழுது, உப்பு, சீரகம் சேர்க்கவும். எண்ணெய் தடவிய வடாம் தட்டில் மாவை மெல்லிய வட்டமாகத் தடவி ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஆறியதும் எடுத்து வெயிலில் காய வைக்கவும்.
பாலக் ஜவ்வரிசி வடாம்
பாலக் கீரையைச் சுத்தம் செய்து சுடுநீரில் அலசி அத்துடன் ஜவ்வரிசியை ஊறவைத்து, காலையில் நன்றாக வேகவிட வேண்டும். வெந்ததும் அரைத்த பாலக் விழுது, சீரகம் சேர்த்துக் கலந்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் டீஸ்பூனால் எடுத்து ஊற்றி, சிறிய வட்டங்களாகச் செய்து காயவைக்க வேண்டும். இதைப்போல, கேரட், பீட்ரூட் சேர்த்தும் வடாம் செய்யலாம்.
அரிசி வடாம்
அரிசியையும் ஜவ்வரிசியையும் கலந்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் அரைக்கவும். மாவை எந்தப் பாத்திரத்தில் அளக்கிறோமோ அதே பாத்திரத்தில் 2½ பாத்திர அளவு தண்ணீர் எடுக்க வேண்டும். பெரிய குக்கரில் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து அதில் அரைத்த மிளகாய் விழுது, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கீழே இறக்கிவைத்து கொஞ்சமாக மாவை போட்டு, கட்டி இல்லாமல் கிளறி, உடனே குக்கர் மூடியைப் போட்டு 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மாவை எடுத்து ஆறவைத்து தேவையான அச்சில் போட்டுப் பிழிந்து கருவடாம் செய்யலாம்.
அவல் வடாம்
கெட்டி அவலை ஊறவைத்து அத்துடன் நறுக்கிய பூசணிக்காய், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். அவற்றை உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயவைக்கவும்.
டிப்ஸ்...டிப்ஸ்..டிப்ஸ்...
* வடாம் மாவைக் கிளறும்போது அடி கனமான பாத்திரத்தில் வைத்துக் கிளற வேண்டும்.
* அரிசியை ஊறவைத்து அரைத்து மாவு கிண்டி செய்யலாம்.
* வடாம் மாவை கிளறி ஆறியதும் திரும்பவும் மிக்ஸில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்க, மாவு மிகவும் வெண்மையாக, பிழிவதற்கு ஈஸியாக இருக்கும்.
* எந்தவிதமான வடாம் செய்தாலும் 2 நாட்களுக்கு வெயிலில் காய வைத்துக் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
* எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக மைக்ரோஅவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்தல் நன்றாகப் பொரிந்து இருக்கும்.
* நான்ஸ்டிக் பாத்திரத்தில் மாவு கிளறினால் மாவு ஒட்டாமல் நன்றாக வரும்.
* கூழ்வற்றல் மாவில் மஞ்சள்பொடி சேர்த்துச் செய்தால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூச்சியும் வராது. மஞ்சள் உடம்பிற்கு நல்லது.
* கருவடாம் மாவில் மிளகாய் சேர்ப்பதற்கப் பதிலாக மிளகு, இஞ்சி சேர்த்துச் செய்யலாம்.
* கருவடாம் மாவில் வெங்காயம், மசாலப்பொடி, பெருஞ்சீரகம், புதினா சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பேப்பரில் வைத்து வெயிலில் காயவைக்கவும்.