குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதிலும் குல்ஃபி ஐஸ் என்றால் சிறியவர் முதல் அனைவரையுமே விரும்பி சாப்பிடுவோம். அதேபோல் சில்லுனு வயிற்றில் இறங்கி புத்துணர்வு தரும் ஃபலூடாவை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதே லிஸ்டில் வரும் கால்சியம் மிகுந்த லஸ்ஸி உடலுக்கு மிகவும் நல்லது .இனிப்பு சுவை விரும்புபவர்கள் இந்த லஸ்ஸியை விரும்பி அருந்துவார்கள். இவற்றை நம் வீட்டிலேயே எளிதாக செய்து ருசிக்கலாம். அவற்றின் செய்முறைகள் இதோ
குல்ஃபி ஐஸ்
தேவையான பொருட்கள்:
பால்- 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு - சிறு கப்
செய்முறை:
பிஸ்தா அல்லது பாதாம் பருப்பை ஒன்று இரண்டாக பொடித்துக் கொள்ளவும். பாலை நீரூற்றாமல் காய்ச்சவும். காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து பால் பாதியாக சுண்டும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நடுவில் சிறிது பாலில் ஊறவைத்த குங்குமப்பூ வை சேர்க்கவும். பால் சுண்டியதும் பிஸ்தா அல்லது பாதாம் பருப்பையும் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய டம்ளர் அல்லது குல்பி ஐஸ் மோல்டுகளிலோ ஊற்றி குளிர் சாதனப் பெட்டி பிரீஸரில் வைக்க வேண்டும். 10 முதல் 12 மணி நேரத்தில் சுவையான குல்பி ஐஸ் தயார். இதில் ஏலக்காய்தூள் சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பது அவரவர் சாய்ஸ். தற்போது விதவிதமான சுவைகளில் குல்ஃபி தயாரிக்கப்படுகிறது. நீங்களும் டிரை பண்ணலாம்.
ஃபலூடா
தேவையான பொருட்கள்:
சேமியா - 1/4 கப்
சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்
ஏதேனும் ஒருவகை ஐஸ்கிரீம்- 2 கரண்டி டூட்டி ஃப்ரூட்டி -2 டேபிள் ஸ்பூன்
செர்ரி பழங்கள் - 8
பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சேமியாவை உடைத்து வேகவைத்துக் கொள்ளவும். சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும். உயர்ந்த கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் வேக வைத்த சேமியாவை பரப்பி பின் ஒன்றின் மேல் ஒன்றாக ஊறிய சப்ஜா விதை, ஐஸ்கிரீம், செர்ரியை போட்டு பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி சில்லென்று பரிமாறலாம். ஐஸ்கிரீம் பிளேவர் அவரவர் சாய்ஸ்.
லஸ்ஸி
தேவை:
புளிக்காத கெட்டித் தயிர் -2 கப்
சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன் அல்லது தேவைக்கு
ஏலக்காய் பொடி -1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ - மிகச்சிறிது
செய்முறை:
கெட்டி தயிரில், சர்க்கரை மற்றும் ஏலக்காய்பொடி சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்த குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கும்போது குங்குமப்பூ தூவி பரிமாறலாம். தயிருடன் ஐஸ் கட்டிகளைப் போட்டு அடித்து உடனே பருகவும் ஏற்றது.