இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி முள்ளு முறுக்கு மற்றும் பாரம்பரிய இனிப்பான அதிரசம் எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்று பார்ப்போம்.
முள்ளு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்.
அரிசி மாவு-2 கப்.
வறுத்த உளுந்து மாவு-1கப்.
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
ஓமம்-சிறிதளவு.
மிளகாய் தூள்- சிறிதளவு.
உப்பு- தேவையானஅளவு.
பெருங்காயப்பொடி- சிறிதளவு.
வெண்ணெய்- 2 தேக்கரண்டி.
சூடான எண்ணெய்-1 தேக்கரண்டி.
பொரிப்பதற்கு எண்ணெய்- தேவையான அளவு.
முள்ளு முறுக்கு செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் 2 கப் அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து மாவு 1 கப், வெள்ளை எள் 1 தேக்கரண்டி, ஓமம் சிறிதளவு, மிளகாய் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பெருங்காயப்பொடி சிறிதளவு, வெண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சுடுத்தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்துக்கொள்ளவும்.
இப்போது முறுக்கு அச்சியில் சிறிது எண்ணெய் தடவி தேவையான அளவு மாவை உள்ளே வைத்து அழகாக முறுக்கை வாழை இலையின் மீது பிழிந்து எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதி வந்ததும் முறுக்கு மாவு அதில் போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கமும் திருப்பி விட்டு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான முள்ளு முறுக்கு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்.
பச்சரிசி-1கப்.
வெல்லம்-3/4கப்.
சுக்குப்பொடி-1 தேக்கரண்டி.
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்;
முதலில் 1 கப் பச்சரியை தண்ணீர் வீட்டு நன்றாக கழுவி எடுத்த பிறகு அரிசி மூழ்கும் வரை தண்ணீர் வீட்டு 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அரிசியை நன்றாக தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட்டு ஒரு துணியிலே அரிசியை நன்றாக பரப்பி உலர வைக்கவும். அரிசி கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருக்கும் போதே நன்றாக மிக்ஸியில் அரைத்து மாவை எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து முக்கால் கப் வெல்லத்திற்கு இரண்டு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து நன்றாக கரைந்ததும் அதில் 1 தேக்கரண்டி சுக்குப்பொடி, 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது ஒரு தட்டில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் பாகை ஊற்றிப் பார்த்தால் நன்றாக உருட்டும் பதம் வந்தால் பாகு தயார் ஆகிவிட்டதாக அர்த்தம்.
இதில் அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை சேர்த்து கைவிடாமல் கலந்துவிடவும். இப்போது மாவு தயார். வாழையிலையில் நெய் தடவி அதிரசமாவை சின்ன உருண்டையாக எடுத்து நன்றாக தட்டி விடவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அதிரச மாவை போட்டு நன்றாக பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுத்தால் சுவையான அதிரசம் தயார்.