வீட்டில் நிறைய பேர் இருந்தால் கொழுக்கட்டை செய்யுங்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் வேலை நிறைய பிடிக்கும் என்பதால் ஆளுக்கு ஒரு வேலையாக பார்த்து சீக்கிரம் முடித்து விடலாம் என்பதற்காக அப்படி சொல்வதுண்டு.
கொழுக்கட்டை பூரணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு பொட்டுக்கடலையைப் பொடித்து வைத்துக்கொண்டால் நல்லது. பூரணம் நீர்த்து இருந்தால் இந்தப் பொடியைத் தூவி சமாளித்து விடலாம்.
அதேபோல் பாசிப்பயிறு வறுத்து அதையும் குருணையாக்கி வைத்துக் கொண்டால் இது போன்ற நீர்க்கசிவை சமாளிக்கலாம். செய்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில் ஒவ்வொன்றாக செய்வது கடினம் என்பதால் முன்கூட்டியே இதையெல்லாம் செய்து வைத்துக் கொண்டு கொழுக்கட்டை செய்ய ஆரம்பிக்கலாம்.
பால் கொழுக்கட்டை
செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி- ஒரு டம்ளர்
தேங்காய்த் துருவல்- ஒரு டம்ளர்
பொடித்த வெல்லம் -ஒரு டம்ளர்
ஏலப்பொடி -ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால் -ஒன்னரை டம்ளர்
கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு தலா -ஒரு டீஸ்பூன் ஊற வைத்தது.
செய்முறை:
அரிசியை நன்றாக ஊறவிட்டு களைந்து அதனுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மாவை தனியாக எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அரைத்தமாவை போட்டு கெட்டியாக கிளறி ஆறிய உடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். கூடவே ஊறிய பருப்புகளையும் போட்டு வேகவிடவும். நன்கு வெந்தவுடன் எடுத்து வைத்த மாவை கரைத்து அதனுடன் கலந்து கொதிக்க விடவும். பிறகு வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்ததும் ஏலப்பொடி போட்டு காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். பருப்பு, பால், வெல்லக்கரைசலில் பால் கொழுக்கட்டை பார்ப்பதற்கு ரம்யமாகவும் பருகுவதற்கு சுவையாகவும் இருக்கும்.
கார வடை
செய்யத் தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி -ஒரு டம்ளர்
உளுந்து -அரை டம்ளர்
வர மிளகாய் -மூன்று
பச்சை மிளகாய்- 3
பொடியாக அறிந்த வெங்காயம்- அரை கப்
மிளகு, சோம்பு ,சீரகம் தலா -அரை டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி- ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கியது தலா-கைப்பிடி அளவு
உப்பு எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியுடன் மிளகாய்கள், இஞ்சி, மிளகு சோம்பு, சீரகம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். உளுந்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை போன்றவற்றைப் போட்டு ,உப்பு சேர்த்து கலந்து, வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையும், மணமும் கொண்ட கரகரப்பான காரவடை இது.