மஷ்ரூம் வைத்து செய்யும் உணவுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பிடித்த மாதிரி சுவையாக செய்து கொடுக்கும் போது அதை வேண்டாம் எனக் கூறாமல் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் அனைவருக்கும் பிடித்தபடி சூப்பர் சுவையில் மஷ்ரூம் குருமா எப்படி செய்வது எனப் பார்க்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் மஷ்ரூம் வாங்கும்போதும் இந்த குருமா வைத்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
மஸ்ரூம் - 250 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - ½ ஸ்பூன்
தேங்காய் துருவல் - ¼ கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தனியா மற்றும் மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதிலேயே கசகசா, வேர்க்கடலை சேர்த்து வதக்கிய பிறகு, தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி வெளியே எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
வதக்கிய பொருட்கள் ஆரியதும் மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கருவேப்பிலை, சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளியை மிக்ஸியில் அரைத்து இதில் சேர்த்து பச்சை வாடை போகும் அளவுக்கு வதக்க வேண்டும். பிறகு அதிலேயே கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து கலந்து, தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து முடி போட்டு வேக விட வேண்டும். பின்னர் இது கொதித்ததும், சுத்தம் செய்து வைத்துள்ள மஷரூமை சேர்த்து, இறுதியில் குருமாவுக்குத் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவி இறக்கினால், சூடான சுவையான கமகமக்கும் மஷ்ரூம் குருமா தயார்.