Pepper banana Flower Fry..
Pepper banana Flower Fry.. 
உணவு / சமையல்

மிளகு வாழைப்பூ பொரியல் செய்யலாம் வாங்க!

கிரி கணபதி

பொதுவாகவே பொரியல் என்றாலே கேரட், பீன்ஸ், கோஸ், முருங்கைக்காய் போன்றவற்றை தான் அதிகம் செய்து சாப்பிடுவோம். ஆனால் ஒருமுறை இந்த பதிவில் நான் சொல்லப்போகும் மிளகு வாழைப்பூ பொரியலை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டதால் அதை அதிகமாக பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. 

வாழைப்பூவை சாதாரணமாக பொரியல் செய்து கொடுத்தால் அதை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள், ஆனால் அதன் துவர்ப்பு நீங்கும்படி மிளகு சேர்த்து பொரியல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பொரியலை நாம் சுலபமாகவே செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

பூண்டு - 5 பல்

மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 

சோம்பு - ½ ஸ்பூன் 

கடுகு - ½ ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

வரமிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

செய்முறை:

முதலில் வாழைப்பூவை பிரித்து அதன் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை கொஞ்ச நேரம் மோர் கலந்து நீரில் போட்டு வைத்தால் துவர்ப்பு சுவை நீங்கும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்பு, கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் போன்றவற்றை சேர்த்து தாளிக்கவும். அதன் பிறகு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். 

வெங்காயம் நன்கு வதங்கியதும் வாழைப்பூவை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பத்து நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். வாழைப்பூ வெந்ததும் அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். 

இறுதியில் உங்களுக்கு பிடித்திருந்தால் தேங்காய் துருவல் மற்றும் மல்லி இலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி அடுப்பை அணைக்கவும். 

அவ்வளவுதான் மிகவும் சுவையான மிளகு வாழைப்பூ பொரியல் தயார். இதில் துவர்ப்பு சுவை துளி கூட இருக்காது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT