விருந்தினர் வந்தால் உணவில் நிச்சயம் ஏதேனும் ஒரு வடை அல்லது பாயசம், கீர் வகைகள் செய்து ஆகவேண்டும். அதை சத்துள்ள வயிற்றை கெடுக்காத ஆரோக்கியம் தரும் வாழைப்பூவிலும் கசகசாவிலும் செய்து தந்தால் சந்தோஷமாக பாராட்டுவார்கள். இதோ செய்முறைகள்.
வாழைப்பூ வடை
தேவை:
வாழைப்பூ - இரண்டு (நரம்பு நீக்கி ஆய்ந்தது)
பொட்டுக்கடலை - இரண்டு கப்
பச்சை மிளகாய் - ஆறு
கசகசா - ஒரு டீஸ்பூன்
சோம்பு- அரை டீஸ்பூன்
லவங்கம் - 5
பட்டை - இரண்டு துண்டு
முந்திரி பருப்பு - 10
கருவேப்பிலை , கொத்தமல்லித்தழை - சிறிது
இஞ்சி - ஒரு அங்குலம்
பூண்டு - ஆறு பல்
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - தேவைக்கு
உப்பு- தேவைக்கு
செய்முறை:
வாழைப்பூவில் உள்ள நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். மோர் , உப்பு கலந்த நீரில் போட்டால் கருக்காமல் இருக்கும். பிறகு அதைப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு மிக்ஸியில் கசகசா, மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், சோம்பு, உப்பு ஆகியவற்றை அரைக்கவும். பொட்டுக்கடலை மாவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து சலித்து வைக்கவும். பொட்டுக்கடலை தூள், அரைத்த மசாலாவுடன் வாழைப்பூவை சேர்த்து பிசைந்து அதில் பொடியாக அரிந்த வெங்காயம் வருத்த முந்திரி பருப்பு இவற்றை போட்டு கருவேப்பிலை மல்லித்தழையை பொடியாக நறுக்கி போட்டுக் கலந்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கலாம். இதில் பொட்டுக்கடலைக்கு பதில் கடலைப்பருப்பையும் ஊறவைத்து ஆட்டி வடையுடன் சேர்க்கலாம். அவித்த வாழைப்பூவை மிக்சியில் ஒரு சுற்று சுற்றிய பின் கலவைகளுடன் கலந்தும் வடை சுடலாம்.
கசகசா கீர்
தேவை:
கசகசா - 4 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு கப்
ஏலக்காய்- 8
பால் - 3 கப்
முந்திரி பருப்பு - 15
உலர்ந்த திராட்சை- 10
சர்க்கரை- 2 கப்
குங்குமப்பூ -ஒரு சிட்டிகை
நெய்- 2 டீஸ்பூன்
செய்முறை:
கசகசாவை லேசாக வறுத்து எடுத்து தேங்காய்த் துருவலுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்பில் பாதி சேர்த்து அரைத்தால் சுவை சூப்பராக இருக்கும். இந்த கலவையுடன் கெட்டியான பால், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அடிக்கடி கிளறிவிடவும். முந்திரி பருப்பையும் உலர்ந்த திராட்சையையும் நெய்யில் வறுத்து கீருடன் சேர்க்கவும்.
ஏலக்காயை பொடி செய்தும் குங்குமப்பூவுடன் நீரில் கலந்தும் அதில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். இந்த கசகசா கீரை சூடாகவும் அல்லது ஜில் என்றும் பரிமாறலாம். கசகசா வயிற்றுப் புண்களை ஆற்றும் குணம் கொண்டது என்பதால் இந்த கீர் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவரும் ஏற்றதாக இருக்கும்.