health care... 
உணவு / சமையல்

வாயுத் தொல்லை தீர கைகண்ட மருந்து சுக்குப் பூண்டு லேகியம்!

சேலம் சுபா

"சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்ல... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை" கேள்விப்பட்டு இருப்பீர்கள். கடவுளை ஒப்பீடு செய்து பேசப்பட்ட மகத்தான மருந்துதான் சுக்கு. நன்றாகக் காய்ந்த இஞ்சியின் மதிப்புக் கூட்டப்பட்ட மறுவடிவம்தான் சுக்கு. இதன் மணமே நமக்கு அவ்வளவு எனர்ஜி தரும்.

தொண்டைகட்டு, குரல் கமறல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்களுக்கு  சுக்கு நிவாரணம் தரும் ஒரு நல்ல மருந்தாக உள்ளது. பசியின்மை, அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு தொல்லைகளுக்கு சுக்கு பானம் (சுக்கு காபி) சிறந்த மருந்து.

சுக்கை அரைத்துப் போடப்படும் பற்றுகளின் நன்மைகள் இதோ…

நெற்றியிலிட - தலைவலி தீரும்
முன் கழுத்தின் மீதிட - தொண்டை வலி தீரும் (tansilitis)
புருவத்தின் மீதிட - அண்மைப் பார்வைக்குறை நீங்கும்
மூட்டின் மீதிட - மூட்டு வலி, வீக்கம் மறையும்.

அடுத்து பூண்டின் மகத்துவம் அறிவோம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய திறன் கொண்ட  பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இது  இதயம் மற்றும் இரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக புற்றுநோய் வராமல் காக்க உதவுகிறது. வேறு எந்த உணவுப் பொருட்களிலும் இல்லாத இந்த ரசாயனக் கூறுகளால் பூண்டு மகத்துவம் நிறைந்த மருந்துப் பொருளாகிறது.

பெண்ணின் பிரசவத்திற்கு பின் கருப்பை  இழந்த சத்துகளை மீட்டு அதன் இயல்பு நிலை அடைய மற்றும்  பால் சுரப்பைத் தூண்டவும், வாயுத் தொல்லையால் அவதிப்படும் மற்றவர்களுக்கும் சுக்கும் பூண்டும்   சேர்த்து செய்யப்பட்ட இந்த "சுக்கு பூண்டு லேகியம்" நல்ல பலன் தரும். பாட்டி காலத்து லேகியத்தின் செய்முறை இதோ…

தேவை:
தேன் - 2 மேசைக் கரண்டி
மலைப் பூண்டு - 100 கிராம் நல்லெண்ணெய் - 100 மில்லி 
மாசுக்கு-  100 கிராம்
கருப்பட்டி -கால் கிலோ
ஏலப்பொடி- சிறிது

செய்முறை:

சுக்கை அம்மி அல்லது மிக்சியில் இட்டு தண்ணீர் விட்டு வழுவழுப்பாக அரைக்கவும். பூண்டை  சுத்தம் செய்து உரித்து வைக்கவும். கருப்பட்டியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி வைக்கவும். அடிகனமான   பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் பூண்டை போட்டு  லேசாக வதக்கி அம்மி கழுவிய சுக்கு நீரை விட்டு வேகவிடவும். இத்துடன் கருப்பட்டி பாகையும் சேர்த்து நன்றாக காய்ச்சி கெட்டியானதும் எண்ணெய்விடும் சமயம், ஏலப்பொடி, தேன் சேர்த்துக்கிளறி இறக்கி சுத்தமான பாத்திரத்தில் வைக்கவும். தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் அளவு அப்படியே சாப்பிடலாம்.

இந்த லேகியம் குழந்தை பிறந்த வீட்டில் தாய்க்கு தரலாம். மற்றவர்களும் வாயு மற்றும் வயிற்று வலிக்கு சாப்பிடலாம். பின் விளைவுகள் அற்ற இது போன்ற மூலிகை மருந்துகளை நமது வீட்டிலேயே செய்து ஆரோக்கியம் பெறுவோம். செய்ய நேரமில்லை என்பவருக்கு நாட்டு மருந்து கடைகளிலும் இது போன்ற லேகியங்கள் கிடைக்கும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT