அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் ஏதேனும் ஒரு காய் இருந்தால் உடனே அவற்றை கொத்சு வகையில் உருமாற்றி சூடான சாதம் அப்பளம் உடன் பரிமாறி விடுவார்கள். இந்த கொத்சு வகைகள் செய்வதற்கும் எளிது ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. காய்களை வேவித்துக் கடைந்து அல்லது சுட்டு மசித்து செய்வதே கொத்சு அடிப்படை. இங்கு சில கொத்சு வகைகளை காண்போம் .
கத்திரிக்காய் கொத்சு
தேவையான பொருட்கள்;
பெரிய கத்தரிக்காய்- 2
பச்சை மிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
குழம்பு மிளகாய் தூள் -இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கடுகு -தாளிக்க
சின்ன வெங்காயம் - 10
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஊற்றிய நீரில் கத்திரிக்காய்களை சிறுசிறு துண்டுகளாகப் நறுக்கி தேவையான உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் சேர்த்து (சிறிது விளக்கெண்ணெய் சேர்க்கலாம்) நன்கு வேகவைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்து இந்த கரைசலில் குழம்பு பொடி சேர்த்து கடைந்து வைத்த கத்திரிக்காய் ஊற்றிக் கிளறி கடைந்து கொதிக்க வைக்கவும். தனியே ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொடியாக அறிந்த வெங்காயம் கருவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறலாம்.
பீர்க்கங்காய் கொத்சு
தேவை;
இளசான பீர்க்கங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
புளி - தேவைக்கு
குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு கரண்டி நல்லெண்ணெய்- இரண்டு கரண்டி
கடுகு உளுந்து - தாளிக்க
சின்ன வெங்காயம் - 5
மஞ்சள் தூள் - சிறிது
செய்முறை:
பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி உப்பு மஞ்சள் தூள் மிளகாய் போட்டு வேகவைத்து கடைந்து கொள்ளவும் புளியைக் கரைத்து குழம்பு பொடி சேர்த்து கொத்சில் கலந்து கொதிக்க வைக்கவும். தனியே கடுகு , நறுக்கிய வெங்காயம் தாளித்து ஊற்றி இறக்கலாம் அல்லது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி கரைத்து வைத்துள்ள பீர்க்கங்காய் கரைசலை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கலாம். புளி குறைவாக சேர்த்தால் பீர்க்கங்காய் ருசி மேம்படும்.
கருணைக்கிழங்கு கொத்சு
தேவை;
கருணைக்கிழங்கு - கால் கிலோ
துவரம் பருப்பு - ரெண்டு டேபிள் ஸ்பூன் சீரகம் - 2 ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி -சிறிது
பூண்டு 4 பற்கள்
மஞ்சள் தூள் -ஒரு டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
செய்முறை;
கருணைக்கிழங்கை மண் போகக் கழுவி வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். தனியாக ஒரு கடாயில் துவரம்பருப்புடன் சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து பொடியாக்கவும். ஒரு வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு இரண்டாக வெட்டிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, போட்டு தாளிக்கவும். அதோடு சேர்த்து தேவையான புளிக்கரைசலை ஊற்றிக்கிளறி சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து கெட்டியாகி எண்ணெய் பிரியும்போது இறக்கவும். கருணைக்கிழங்கு ருசியுடன் சூப்பராக இருக்கும் இந்த கொத்சு.