வாழ்க்கையின் ஒரு பகுதியான முதுமை, இயற்கையாக நமது உடலில் ஏற்படும் ஒரு மாற்றம் ஆகும். நமது சருமம் வயதான தோற்றத்தைப் பெற வைக்கும் காரணிகள் பல உள்ளன. ஆனாலும், சில பழக்க வழக்கங்களால் நமது வயதான தோற்றத்தை தாமதப்படுத்த முடியும். அது குறித்த 5 வாழ்க்கை வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. சமூக தனிமை: மூத்த குடிமக்கள், அதாவது 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 23 சதவீதம் பேர் தங்கள் வாழ்வில் தனிமையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனிமை மற்றும் சமூகத் தொடர்பு குறைவதால் டிமென்சியா, இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்படுவதால் நண்பர்கள், குடும்பத்தினர், கூட்டாளிகள் மற்றும் சக பணியாளர்கள் அல்லது ஏதேனும் சமூகத் தொடர்புகளை வயதான ஒவ்வொருவரும் வைத்திருப்பது அல்லது இணைந்து வாழ்வது விரைவில் வயதாவதைக் கட்டுப்படுத்தும் காரணிகளில் மிகவும் முக்கியமானதாகும்.
2. சூரிய ஒளி: நாள்தோறும் சன் லோஷனையும் பாதுகாப்பு கொண்ட நல்ல தரமான சன் கிளாஸ்களையும் அணிவதால் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் கண்கள் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்க முடியும். மேலும் காலையிலும் மாலையிலும் இதமான வெயிலில் இருப்பதன் மூலமாக உடலுக்கு வைட்டமின் டி பெறப்படுவதால் முதுமை அடைவது தள்ளிப்போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
3. உட்கார்ந்த வாழ்க்கை முறை: பெரும்பாலும் உட்கார்ந்தே இருப்பதால், அதாவது தொலைக்காட்சி முன் நேரத்தை போக்குவதால் உடல் செயல்பாடு குறைந்து எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்க்க வேண்டும். மேலும், சுறுசுறுப்பாக இருப்பது நடைப்பயிற்சி, நடனம் போன்றவற்றில் நம்முடைய உடலை ஈடுபடுத்துவதன் மூலம் தசைகளை பாதுகாப்பதாலும் சருமத்தை புதுப்பிக்க உதவுவதாலும் முதுமை தள்ளிப்போக வாய்ப்பு உண்டு.
4. நாள்பட்ட மன அழுத்தம்: நாள்பட்ட மன அழுத்தங்களை முற்றிலுமாக ஒழிப்பது கடினம் என்றாலும், அதைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். முதியவர்கள் ஒரு நாளில் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும் தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சி செய்வது அடிக்கடி உடற்பயிற்சி செய்வது ஆகியவை நாள்பட்ட மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆகவே, நாள்பட்ட மன அழுத்தத்தைக் குறைத்து வயதான தோற்றத்தை தாமதம் ஆக்குங்கள்.
5. சர்க்கரை மற்றும் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவு: சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மோசமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இந்த உணவு தேர்வுகளை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் முழு தானியங்கள் மற்றும் இறைச்சி அடங்கிய ஆரோக்கியமான உணவை பின்பற்றுவதன் மூலம் வயதான தோற்றத்திலிருந்து வலிய விலகி வந்து விடலாம்.
மேற்சொன்ன 5 வாழ்க்கை முறைகளும் வயதாவதைக் குறைக்கும் காரணிகளில் மிக முக்கியமானவை ஆகும். இவற்றை நம் வாழ்நாளில் கடைபிடிக்க இளமையான தோற்றத்தை என்றென்றும் பெறலாம்.