நுண்ணிய மேலாண்மை (Micromanagement) என்பது ஒரு நிர்வாகப் பணியாகும். மேலாளர் தன் கீழ் பணிபுரிபவர்களை மிகவும் நெருக்கமாக அல்லது அதிக அளவில் கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும் குறிக்கும். இதனுடைய சிறப்பியல்புகளையும் அது ஏற்படுத்தும் இழப்புகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மைக்ரோ மேனேஜ்மென்ட் சிறப்புகள்:
அதிக லாபம்: ஊழியர்களை தொடர்ந்தும் அதிகப்படியாகவும் கவனித்து, கண்காணித்து வருவது திறம்பட வேலை செய்ய வைக்கும். இது உற்பத்தியை அதிகரித்து நிர்வாகத்திற்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும்.
துல்லியத்தன்மை: மேலாளர் அல்லது குழுத்தலைவர் மிகவும் நெருக்கமாக தன்னை கண்காணிப்பதால் பணியாளர்கள் தங்கள் வேலைகளை மிகவும் துல்லியமாக, சிறப்பாக செய்வார்கள். நுண்ணிய விவரங்களுக்கு அதிக கவனம் செலுத்துவார்கள். செய்யும் வேலையில் தவறு வராமல் பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக, நிதி மற்றும் பொறியியல் துறைகளில் இது மிகவும் முக்கியம்.
புதிய பணியாளர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்: புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு இந்த மைக்ரோ மேனேஜ்மென்ட் நன்றாகக் கை கொடுக்கும். வேலையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள விரிவான வழிமுறைகளை துல்லியமாக கற்றுக்கொள்ள உதவுகிறது. பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. காலப்போக்கில் அவர்கள் நல்ல ஊழியர்களாக உருமாறுவார்கள்.
உயர்தரத்தை பராமரிக்கிறது: கவனத்துடன் வேலை செய்வதால் அது மிகவும் தரமாக அமைவது உறுதி. ஆடம்பரப் பொருட்கள், உயர்நிலை உணவகங்கள், சிறப்பு கைவினைத் திறன் போன்ற தொழில்களில் இந்த பாங்கு மிகவும் முக்கியம்.
காலக்கெடுவை எளிதாக்குகிறது: இறுக்கமான காலக்கெடுவின் கீழ் பணிபுரிய நேரும்போது பணிகள் திறமையாகவும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மைக்ரோ மேனேஜ்மென்ட் உதவுகிறது. முன்னேற்றத்தை முன்னிட்டு, தொடர் கண்காணிப்பும், தேவைக்கேற்ப விரைவான மாற்றங்களை செய்வதன் மூலமும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.
சிக்கலான வேலைகளை எளிதாக்குகிறது: சிக்கலான வேலைகளுக்கு நுண்ணிய மேலாண்மை மிகவும் அவசியம். செய்யும் வேலையில் உள்ள அபாயங்களை குறைத்து தேவையான மேற்பார்வையை வழங்குகிறது. ஒரு திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் சரியானதாக சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் நிறுவனத்தின் நேரமும் பணமும் மிச்சப்படுகிறது.
நுண்ணிய மேலாண்மை ஏற்படுத்தும் இழப்புகள்:
அற்ப விவரங்களில் கவனம்: ஒட்டுமொத்த இலக்குகள் அல்லது அதனுடைய விளைவுகளை விட அற்பமான விவரங்களில் மேலாளர்கள் கவனம் செலுத்துவதால் பணியாளர்களின் ஆர்வம் குறையும்.
குறுக்கீடுகள்: மேலாளர் அடிக்கடி குறிக்கிட்டு கேள்விகள் அல்லது யோசனைகள் சொல்லிக்கொண்டே இருக்கும்போது பணியாளர்களுக்கு சுதந்திர மனப்பான்மை இல்லாமல் போய்விடும். ஒருவித பதற்றத்துடன் அவர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
குறைந்த மன உறுதி: தங்களை மேலாளர் சரியாக நம்பவில்லை என்ற எண்ணம் பணியாளர்களுக்கு ஏற்படும்போது அவர்கள் நம்பிக்கை குலைந்து விரக்தி மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தத்திற்கும் வழி வகுக்கிறது.
திறமை இன்மை: ஒவ்வொன்றையும் மேலாளரின் ஒப்புதலோடு செய்யும்போது ஊழியர்கள் முன் முயற்சி எடுப்பது தவிர்க்கப்படும். தாங்களாக எதுவும் புதிதாக யோசிக்க மற்றும் செயல்பட முடியாத நிலையில் அவர்களுடைய திறமை கூர்மை பெறாது.
அதிருப்தி: தாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம் என்கிற எண்ணம் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவிக்கும். 'நாம் என்னதான் நன்றாக வேலை செய்தாலும் கண்காணிக்கிறார்கள்' என்ற எண்ணம் அவர்களுக்கு திருப்தியின்மையை ஏற்படுத்தும்.
மேலாளரின் மன அழுத்தம்: தான் உயரிய பதவியில் இருந்தாலும் தொடர்ந்து ஊழியர்களைக் கண்காணிப்பதால் மேலாளர்களுக்கு அது ஒரு கடுமையான மனச்சுமையை தரும். எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். அதனால் ஊழியர்களை தொடர்ந்து கண்காணிக்காமல், அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து, சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதுதான் சிறந்தது.