Amnesia is also beneficial! How? https://www.medindia.net
வீடு / குடும்பம்

ஞாபக மறதி கூட நன்மை தருமே! எப்படி?

எஸ்.விஜயலட்சுமி

ம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஞாபக மறதி எட்டிப்பார்ப்பது சகஜம். முதியவர்களுக்கு வயதாக ஆக ஞாபக சக்தி குறைந்து மறதி அதிகரிக்கும். ஆனால், நாற்பது வயதுக்காரர்கள் கூட அடிக்கடி, 'பைக் சாவியை எங்க வெச்சேன்? வீட்டு சாவியை காணோம். கரண்டிய எங்க வெச்சேன்? ஃப்ரிட்ஜை திறந்து விட்டு எதற்காகத் திறந்தேன்? என்ன எடுப்பதற்காக திறந்தேன்?’ என மறந்து விடுவார்கள். ஆனால், ஞாபக மறதியால் சில நன்மைகளும் உண்டு. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பரபரப்பும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சில சமயங்களில், சில விஷயங்களை மறந்து விடுவது நன்மை தரும். நமது மூளையில் ஏகப்பட்ட விஷயங்களை சேகரித்து வைத்து அவற்றை நினைவு கூறுவது அவசியம் இல்லை. பயனற்ற தேவையற்ற விஷயங்களை நிராகரிப்பது நல்லது. அப்போதுதான் நமது மூளையால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். தேவையில்லாத குப்பைகள் அங்கே சேரும்போது மூளையின் இயக்கம் பாதிக்கப்படும். உதாரணமாக, செய்தித்தாள்களில் நாம் படிக்கும் தேவையில்லாத அரசியல் விவகாரங்கள், பயனற்ற செய்திகளை உடனே மறந்து விடுவது நல்லது. நான்கு வருடத்திற்கு முன்பு பார்த்த சீரியல்களில் இருக்கும் கதைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவற்றை மறப்பது நல்லதுதான்.

பயனற்ற விஷயங்களை மறக்கும்போது, மூளை தேவையான விஷயங்களை நினைவில் பத்திரமாக சேமித்து வைக்கும். குப்பைகளை அகற்றும்போது மூளை நமது சிந்திக்கும் திறனை அதிகரிக்கிறது. முடிவுகளை எடுக்கும்போதும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும்போதும் அது சுறுசுறுப்பாக இயங்குகிறது.

ஒரு நபரைப் பற்றிய தேவையற்ற விஷயங்களை நினைவில் சேகரித்து வைத்துக்கொள்வது அவசியம் இல்லை. அவற்றை மறப்பது நல்லது. சில முதியவர்கள் ஒன்றுக்கும் உதவாத பழைய விஷயங்களை ஞாபகம் வைத்திருப்பார்கள். யாராவது அவர்களுக்குக் கெடுதல் செய்திருந்தால், அவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகப்படுத்தி வைத்திருந்து அடிக்கடி அவற்றை நினைத்துப் பார்ப்பார்கள். இதனால் அவர்களுக்கு மனச்சுமை ஏற்படுவதோடு அதிக அளவு மன அழுத்தமும் ஏற்படுகிறது.

எதிர்மறையான அனுபவங்கள் அல்லது அதிர்ச்சிகரமான நினைவுகளை ஞாபகத்தில் சேகரித்து வைத்திருப்பது ஒருவரை எப்போதும் சோகத்திலேயே வைத்திருக்கும். எனவே, அவற்றை மறந்து விடுவது நன்மை பயக்கும். துன்பகரமான நினைவுகளை படிப்படியாக மறக்க வேண்டும். அவற்றை அடிக்கடி ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவை நினைவில் தங்கி சிரமத்தைக் கொடுக்கும்.

அதேபோல ஒருவர் தனது கடந்த காலத்தில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் அவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பழைய அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை மட்டும் ஞாபகம் வைத்து இருக்கலாம். 'நான் என் கடந்த காலத்தில் இத்தனை தவறுகளை செய்து விட்டேனே?’ என்று மனம் வருந்திக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதனால் அவரது இன்றைய வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். எனவே, அவற்றை சுத்தமாக மறந்து விட்டு புதியதாக வாழ வேண்டும்.

பிறர் தமக்கு செய்த தீங்குகளையும் மறக்க வேண்டும். வெறுமனே மறக்காமல் அவர்களை மன்னித்து விட்டு மறக்க வேண்டும். மன்னித்தால் மட்டுமே அந்த நினைவுகள் மீண்டும் தலை தூக்காது. தவறு செய்வது மனித இயல்பு. எனவே, தன்னையும் பிறரையும் மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை மறப்பதன் மூலம் நமது நினைவடுக்குகள் மிகவும் ஆற்றலுடன் செயல்படும். கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், படைப்பாற்றலில் ஈடுபடுபவருக்கு புதிய விஷயங்களை, புதிய தகவல்களை மூளை பத்திரமாக சேமித்து வைக்கும். அவர்களால் புதிய சிந்தனையை உருவாக்கி புதிய படைப்புகளை நன்றாக வழங்க முடியும்.

மறதி கடந்த காலக் கசப்புகளை அகற்றி தவறுகளை அழித்து நிகழ்காலத்தில் நம்மை சந்தோஷமாக வாழ வைக்கிறது. தானாக மறதி ஏற்படாவிட்டால் வலிந்து இவற்றையெல்லாம் மறந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயத்தில் ஞாபக மறதி பிரச்னை அதிகமாக இருந்தால் தகுந்த மருத்துவரை கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறலாம்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT