ஓமம் தண்ணீர் 
வீடு / குடும்பம்

அன்றாட வாழ்வில் அவசியத் தேவையாய் இருக்கும் ஓமத்தின் பயன்கள்!

கோவீ.ராஜேந்திரன்

ந்தியக் குடும்பங்கள் நன்கு அறிந்த ஒரு மசாலா பொருள் ஓமம். ஆங்கிலத்தில், ‘அஜ்வைன்’ என அழைக்கப்படும் இது நமது நாட்டிலேயே தோன்றிய ஒரு மூலிகை  செடியாகும். சுமார் ஒரு மீட்டர் உயரம் இது வளர்கிறது. இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த விதைகளே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்த அற்புத மூலிகை பொருள் ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது.

ஓமத்தில் உள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்துக்கள், புரோட்டீன், சோடியம், பொட்டாசியம், டானின்கள், கிளைக்கோசைட்கள், ஈரப்பதம், சாப்போனின்கள், ஃப்ளேவோன்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோபால்ட், காப்பர், அயோடின், மாங்கனீஸ், தியாமின் மற்றும் ரிபோஃப்ளாவின் போன்ற மினரல்கள் உள்ளன. ஓம விதைகளை பச்சையாகவோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ சாப்பிடலாம். இதில் இருக்கும் தைமால் எனப்படும் எண்ணெயே பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் வறுத்த ஓமத்தை போட்டு காய்ச்சி அதை 300 மி.கி. ஆக வற்றச் செய்து அதை காலை ஒரு முறை, இரவு ஒரு முறை என சாப்பாட்டிற்கு முன் சாப்பிட செரிமானக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் எண்ணம் சரியாகும். வெறும் ஓம தண்ணீர் சாப்பிட முடியாதவர்கள் சுவைக்கு கற்கண்டு சேர்க்கலாம். குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஓம விதைகள் தீர்வு தருவதாக, சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

ஓமம் சளியை எளிதில் வெளியேற்றுவதன் மூலம் நாசி அடைப்பைத் தவிர்க்க உதவுகிறது. இதற்கு ஓம விதைகள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை சூடாக்கி ஒரு லேகியம் தயார் செய்து, அதை 2 டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். இருமல், சளி பிரச்னைக்கு ஒரு ஸ்பூன் ஓம விதையுடன், துளசி இலைகளை வேகவைத்து சாற்றை குடித்தால் குணமாகும். நுரையீரலிலுள்ள சளியை அகற்றி வெளியே தள்ளிவிடும். ஓமத்தை ஈரத்துணியில் கட்டி நுகர்ந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும், வறட்டு இருமல் குறையும்.

ஓம விதைகளை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிப்பது பல் வலிக்கு நல்லது. வாய் சுகாதாரத்தை பராமரிக்கவும் இது உதவுகிறது. பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற, வெதுவெதுப்பான நீரில் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து வாய் கொப்பளியுங்கள். நிவாரணம் கிடைக்கும்.ஓம விதைகளை நசுக்கி சருமத்தில் தடவினால் தொற்று அல்லது வெட்டுக்களுக்கு சிகிச்சையளிக்கலாம். எனவே, அடுத்த முறை உங்களுக்கு இதுபோன்ற காயம் ஏற்பட்டால், ஓம விதைகளைப் பயன்படுத்துங்கள்.

மாதவிடாய் சுழற்சி சரிவர இயங்கவும், பெண்கள் சிறுநீர் கழிக்கும் பாதையை கெட்ட பாக்டீரியா தொற்றுகளிலிருந்து விலக்கி அந்தப் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலியை நீக்கவும் ஓம நீரைப் பயன்படுத்தி வருகிறார்கள். இது கர்ப்பப்பை மற்றும் வயிற்றை சுத்தம் செய்வதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு அஜீரண பிரச்னையை குணப்படுத்துகிறது.

சிறிதளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மறுபடியும் கொதிக்க விட்டு வடிகட்ட வேண்டும். பிறகு இதில், கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் தேய்த்தால், இடுப்பு வலி உடனே நீங்கும்.

தினமும் சிறிதளவு ஓம தண்ணீரை பருகினால் அது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றுகின்றது. பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் உள்ளதால் அது தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவும். ஓமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஓம வாட்டர், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஓம விதைகளில் கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவும் இரண்டு குணங்கள் உள்ளன. 50 மில்லி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு காய்ச்சி அதை ஆற வைத்து மூட்டு வலி, சூதக வலி உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெந்நீரில் கழுவ வலிகள் குறையும். ஓமம் விதைகளை, விழுதுபோல அரைத்து, மூட்டுகளில் தடவினால், நிவாரணம் கிடைக்கும்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஓமத்தை தூள் செய்து, தேய்த்தால் வலி விலகும். காது வலியைக் குறைக்க, மக்கள் பொதுவாக இரண்டு சொட்டு ஓம எண்ணெயை விட்டு வலியை விரட்டுகிறார்கள்.

பாத்திரத்தில் தண்ணீரோடு ஓமம் சேர்த்து அது பாதியாகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் எலுமிச்சை, தேன், இந்துப்பு சேர்த்து கலந்து மிதமான சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக பருக, அது உங்களுக்கு அந்த நாளுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

கடுகு எண்ணெயை ஓம விதைகளுடன் சேர்த்து, அட்டைத் துண்டுகளில் தடவி, கொசுக்களைத் தடுக்க உங்கள் அறையின் மூலைகளில் கட்டலாம்.

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT