நம் வாழ்க்கை என்றும் நம் கையில். இன்பமும் துன்பமும் நமக்குள் தானே தவிர நம்மைச் சுற்றி இல்லை இதை அறிந்து கொள்ளாத பலர் அடுத்தவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணத்துடனே வாழ்ந்து தம் வாழ்வை வீணாக்கிக் கொள்கின்றனர். பிறருக்காக சிலுவைகளை சுமக்க விடுவதில்லை இந்த அவசர உலகம். மீறி சுமந்தால் நஷ்டம் நமக்கே.
எனக்குத் தெரிந்த இளைஞன் சிறு வயதிலிருந்து தன் மாமா பெண்ணை விரும்பினான் . அந்தப் பெண்ணும் இவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவர்களைப் பெற்றவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இடையில் குடும்ப சொத்து காரணமாக இரு குடும்பங்களுக்கிடையில் மனஸ்தாபம் . இதனால் பாதிக்கப்பட்டது அந்த ஜோடிதான். அந்தப் பெண் அனைத்தையும் உதறி விட்டு விரும்பிய உங்களுடன் வருகிறேன் என்று சொல்லியும் அந்த இளைஞன் மறுத்து ஒதுங்கி விட்டான். மற்றவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு தந்தவன் தன் மனதில் இருந்த உண்மையான அன்பிற்கு மதிப்புத் தரத் தவறி இன்று மனதில்வருத்தம் சுமந்து வாழ்கிறான் .காரணம் அந்தப் பெண்ணின் தற்கொலை ..அவன் நினைத்திருந்தால் பெற்றோரிடம் காதலை எடுத்துக் கூறி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கலாம் .மற்றவருக்காக யோசித்த அவன் தனக்காகவும் தன்னை நம்பிய வளுக்காகவும் சிந்திக்கத் தவறியதால் எத்தனை பெரிய விபரீதம் ?
இப்படித்தான். நிறைய பேர் அடுத்தவர் என்ன நினைப்பார்களோ என்ன சொல்லுவார்களோ என்று எண்ணி தங்கள் வாழ்க்கையில் வரும் வாய்ப்புகளை விட்டுவிட்டு அல்லது தியாகம் செய்து வாழ்க்கையை வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள். பெற்றவராகவே இருந்தாலும் நியாயம் இருக்கும் பட்சத்தில் தங்கள் கருத்துகளுக்கு மதிப்பு தருவதே இந்தக் காலகட்டத்திற்கு சரிவரும்.
பிறரைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களுக்காக இந்த எளிய ஆலோசனைகள்:-
பிறரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள் அவைகள் உங்களை பாதிக்காத வரை. பிறருக்காக விட்டுக் கொடுத்து வாழுங்கள் ஆனால் அதற்காக சுய மரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.
பிறருக்காக உங்கள் எண்ணங்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம் நன்மை ஏற்படும் என்றால் மட்டுமே.
பிறரிடம் கீழ்ப்படிந்து இருங்கள், ஆனால் அடிமையாய் மாறிவிடாதீர்கள்.
பிறருக்காக உங்களை தாழ்த்திக் கொள்ளலாம், நல்லது நடக்கும் என்றால்!
பிறர் உங்கள் சொந்த வாழ்க்கையில் தலையிட்டால் பொறுமையாக இருக்கலாம். ஆனால் அது எல்லை தாண்டாமல் இருக்கும் வரை!
உங்களுக்காக நீங்கள் என்பதை மனதில் வைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறருக்காக என்ற வார்த்தையை கூடுமானவரையில் உபயோகிக்காதீர்கள் நாம் நமக்காக வாழ்வோம்; நன்மைகளை மனதில் ஏந்தி.