வெதுவெதுப்பான நீர் அருந்துவது குளிருக்கு ஆறுதலாக இருக்கும். வெந்நீர் செரிமானத்தை எளிதாக்கி நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். வெந்நீர் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. மலச்சிக்கல் பிரச்னை இருப்போர் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. இத்தனை சிறப்பு வாய்ந்த வெந்நீர் குடிக்கக் கூடாத 5 வகை நபர்களும் உண்டு. அவர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வாய் புண் உள்ளோர்: வாய் புண்ணால் அவதிப்படுபவர்கள் வெந்நீர் குடிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில், வெந்நீர் புண்களின் மீது படும்போது அதிக பாதிப்பை உண்டாக்கி, வலியை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும், வாயில் உள்ள புண்கள் சீக்கிரம் ஆறாமல் போய்விடும். ஆதலால், இது மாதிரியான சமயங்களில் குளிர்ந்த நீரைப் பருகுவது நல்லது.
2. நீர்ச்சத்து குறைபாட்டாளர்: நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் வெந்நீர் குடிப்பதால் உடலில் அதிகப்படியான நீர் வெளியேறிவிடும். மேலும், உடலில் உள்ள தாதுக்கள் கூட நீங்க வாய்ப்பு அதிகம். இதனால் நீரிழப்பு பிரச்னை ஏற்படும். நீரிழப்பு பிரச்னை இருப்பவர்கள் வெந்நீர் குடிப்பதைத் தவிர்த்து விட்டு சாதாரண தண்ணீரைக் குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும்.
3. அமிலத்தன்மை கோளாறு உள்ளவர்கள்: அசிடிட்டி பிரச்னை இருப்பவர்கள் வெந்நீர் குடித்தால் வயிற்றில் இருக்கும் அமில அளவு அதிகரிக்கும் என்பதால் வாயு பிரச்னை உள்ளவர்கள் வெந்நீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் வெந்நீர் குடிப்பதால் வயிறு எரிதல், புளித்த ஏப்பம், வாயு கோளாறுகள் உண்டாகலாம்.
4. வயிற்றுப் புண் உள்ளவர்: வயிற்றுப் புண் இருப்பவர்கள் வெந்நீர் குடித்தால் வயிற்றுப் புண்களை மேலும் மோசமாக்குவதோடு, வலியையும் அதிகப்படுத்தும். ஆதலால், சாதாரண நீரைப் பருகுவது வயிற்றுக்கு குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருக்கும்.
5. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்: தீவிர காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள், சுடச்சுட வெந்நீரை அருந்துவதற்கு பதிலாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், சூடாகத் தண்ணீர் குடிப்பது தீவிர காய்ச்சலில் இருப்பவர்களுக்கு மேலும் உடலின் வெப்பத்தை அதிகமாக்கும் என்பதால் இவர்கள் வெந்நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வெந்நீர் மழை மற்றும் பனி காலத்திற்கு ஏற்றது என்றாலும் அதிகமாக வெந்நீர் குடிப்பது தொண்டை, செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் வெந்நீர் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது மிகவும் நல்லது.