மன அமைதியின்றி தவிக்கும் பெண் 
வீடு / குடும்பம்

மன அமைதியைக் கெடுக்கும் 9 விஷயங்கள் எவை தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

நாள் தவறாமல் தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் இத்துடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலும் சிலருக்கு மன அமைதி கிட்டுவதில்லை. தன்னை அறியாமலேயே ஒருவர் செய்யும் சில செயல்கள்தான் அவரது மன அமைதியைக் கெடுக்கின்றன.

1. உணர்ச்சிகளை அடக்குதல்: மனதிற்குள்ளேயே கோபம், வெறுப்பு, ஆத்திரம், பொறாமை மற்றும் இன்னும் சில தீய உணர்வுகளை ஒருவர் வளர்த்துக் கொண்டு வந்தால் அவரது மன அமைதி நிச்சயமாகக் கெடும். நெருங்கிய உறவுகள், குடும்பத்தாரிடம் அல்லது நட்புகளிடமோ உடன் பணிபுரிபவர்களிடமோ சில விஷயங்களை நேரடியாகப் பேசி தெளிவு பெறுவது நல்லது. மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படுத்தி விட்டால் ஸ்ட்ரெஸ் ஏற்படாது. மன அமைதியும் கெடாது.

2. அதீத டிஜிட்டல் பயன்பாடு: அதிகளவு நேரத்தை டிஜிட்டல் சாதனங்களில் பயன்படுத்துவது ஒரு ஆபத்தான விஷயமாகும். டிவியில் அடிக்கடி நியூஸ் பார்ப்பது, சோஷியல் மீடியாக்களில் மூழ்குவதால் அதிலிருக்கும் எதிர்மறையான செய்திகள் ஒருவரது மன அமைதியை பாதித்து, நிம்மதியை பறித்து விடும். எனவே, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அவற்றைப் பார்க்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

3. பிறரை திருப்திப்படுத்துதல்: சிலர் எப்போதும் பிறரை திருப்திப்படுத்துவதே தனது வாழ்வின் ஒரே நோக்கம் என்பது போல செயல்படுவார்கள். உடை அணிவதில் இருந்து உண்பது, பேசுவது என பிறர் என்ன சொல்லுவார்கள் என்று பிறரின் கருத்துக்கே மதிப்பும் மரியாதையும் தருவார்கள். இத்தகைய செயல்பாடுகள் ஒருநாளும் மன நிம்மதியை தராது. பிறரிடம் எதிர்பார்க்கும் இந்தத் தன்மை ஒருவருக்கு மனப்பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் தரும். பிறருக்கு தீங்கு தராத, தனக்கு விருப்பப்பட்டதை செய்வதில் எந்தத் தயக்கமும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

4. நேரத்தை வீணடித்தல்: அடிக்கடி ஷாப்பிங், வெளியில் சுற்றுவது, ஹோட்டல்களில் உண்பது, வீண் அரட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது மன அமைதி கெட்டுப்போகும். இது ஒருவருக்கும் குற்ற உணர்வையும் திருப்தியின்மையையும் ஏற்படுத்தும். எனவே, இவற்றை மிக அளவோடு வைத்துக்கொள்வது நல்லது.

5. நினைவுகளில் வாழ்வது: அடிக்கடி கடந்த காலத்தை நினைத்து வருந்துவதும் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதும் சிலரின் வாடிக்கையாக இருக்கிறது. கடந்த காலத்தில் நடந்து முடிந்த தவறுகளையும் நிகழ்வுகளையும் ஒருவரால் மாற்ற முடியாது. அதுபோல, வருங்காலத்தில் நடக்கப்போவதை தடுத்து நிறுத்தவும் முடியாது. நிகழ்காலத்தில், இன்றைய தருணத்தில் அனுபவித்து வாழ்வது சிறந்தது.

6. தோல்வி பயம்: எடுத்த காரியத்தில் தோல்வி கிடைக்குமோ என எண்ணி அதை செய்யாமல் விட்டு விடுவது மனபாரத்தை ஏற்படுத்தும். சவால்களை சந்திக்க பயந்து, அவற்றை ஒதுக்குவது ஒருவரின தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவாது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழுமனதோடு ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.

7. பொறுப்புகளைத் தூக்கி சுமப்பது: சிலர் தேவையே இல்லாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் ஏகப்பட்ட பொறுப்புகளை தூக்கி சுமப்பார்கள். இதனால் மனப்பதற்றமும் மன அழுத்தமும் விரக்தியும் வரும். எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலை என்று செய்தாலே அமைதியும் நிம்மதியும் கிட்டும்.

8. பரிபூரணத்துவம்: இந்த உலகில் யாருமே 100 சதவிகிதம் பரிபூரணத்துவம் நிறைந்தவர்கள் அல்ல. அதை பிறரிடம் எதிர்பார்க்கும்போது ஏமாற்றமும் கசப்பும்தான் வந்து சேரும். அது உறவுகளை பாதிக்கும். மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

9. எல்லைகள்: எல்லைகளை அமைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். மற்றவர் தனிப்பட்ட விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே மூக்கை நுழைக்க வேண்டும். இல்லையெனில், அது சம்பந்தப்பட்ட இருவர் மன அமைதியையும் கெடுத்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT