கரேன் (KAREN) என்பது ஒரு பேச்சு வழக்குச் சொல். இது ஒரு நடுத்தர வயது மேலைநாட்டு பெண்ணைக் குறிக்கும் சொல். கரேன் பெண்ணின் இயல்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. மிகவும் கோபப்படுவார்கள்: கரேன் வகை பெண்கள் சிறிய விஷயங்களுக்கெல்லாம் மிகவும் கோபப்படுவார்கள். உதாரணமாக, ஒரு உணவகம் சென்று அவர் ஆர்டர் செய்த உணவு வர சற்றே தாமதமானாலும் அல்லது அதிலே ஏதாவது சிறிய தவறு இருந்தாலும் கோபப்பட்டு கத்துவார். உடனே மேனேஜரை பார்க்க வேண்டும் என்று கேட்பார். அவருக்கான இழப்பீடை தரும்படி வற்புறுத்துவார். பணியாளர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்களை விட தான் மிகவும் முக்கியமானவர் என்பது போல நடந்து கொள்வார்.
2. அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தும் குணமுடையவர்: தன்னுடைய அண்டை வீட்டார் குழந்தை சத்தமாக விளையாடிக் கொண்டிருக்கிறது அல்லது தன்னுடைய இடத்தில் வேறு யாராவது வண்டியை நிறுத்திவிட்டார்கள் போன்ற காரணங்களுக்காக இந்தப் பிரச்னையை அமைதியாக சுமூகமாக தீர்ப்பதற்கு பதிலாக அதைப் பெரிய பிரச்னையாக்குவார். குழந்தை கத்தியதற்கெல்லாம் போலீசை கூப்பிடுவேன் என்று மிரட்டுவார்.
3. அதீத உரிமை உணர்வை வெளிப்படுத்துவார்கள்: சிறிய சில்லறை கடைகளில் கூட சரியான சில்லறை தரவில்லை என்ற அற்ப காரணத்திற்காக கடை முதலாளியிடம் தான் பேச வேண்டும் என்று உரிமை கோருவார்கள்.
4. அதிக சலுகைகளை எதிர்பார்ப்பார்கள்: கடைக்குச் சென்று ஏதாவது பொருள் வாங்கினால் தனக்கு அதிகமான சலுகைகள் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால், தாங்கள் அதற்கு தகுதியான நபர்கள் என்று அழுத்தமாக நம்புவார்கள்.
5. பச்சாதாபம் இன்மை: எம்பத்தி எனப்படும் பச்சாதாப உணர்வு அவர்களுக்கு அறவே இல்லை. பிறரின் உணர்வுகளை, தேவைகளை புறக்கணித்து விடுவார். தங்களது சொந்த ஆசைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் இயல்புடையவர்கள். சமரசம் செய்யவும் மாற்றுத் தீர்வுகளை கருத்தில் கொள்ளவும் மாட்டார்கள். தங்களுக்கு ஏற்றது போல காரியம் முடிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், வலியுறுத்துவார்கள்.
6. அதிகாரம்: தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களை கீழ் நிலையில் இருப்பதாகக் கருதுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக பேசவோ, செயல்படவோ மாட்டார்கள். அவர்களை அதிகாரம் செய்து மகிழ்வார்கள். விதிகள் அல்லது வழிகாட்டுதலை பின்பற்ற மறுப்பார்கள்.
மனிதர்கள் எப்போதும் பிறர் மேல் குறைந்த அளவாவது அன்பும் இரக்கமும் காட்ட வேண்டும். நம்மைப் போல அவர்களும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் பழகினால் மட்டுமே பிறருடைய நட்பும் அன்பும் தனக்குக் கிடைக்கும் என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.