செல்வந்தர்களைப் பார்த்து பலரும் சொல்லும் வார்த்தை, ‘இவங்க பார்ன் வித்சில்வர் ஸ்பூன்’ என்பதாகும். ஆனால், வெள்ளி உலோகத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உன்னதமான ஒரு தொடர்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனால்தான் நமது முன்னோர்கள் பலரும் வெள்ளித்தட்டில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம். குறிப்பாக, வெள்ளித் தட்டில் உணவை வைத்து குழந்தைகளுக்கு ஊட்டினால் அது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், வெள்ளி கரண்டி கொண்டு சாப்பிட்டால் அது உணவை சத்தாக மாற்றுவதோடு பலவிதமான நோய்களையும் தடுக்கிறது. நாம் வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
வெள்ளிப் பாத்திரங்கள் உணவிலுள்ள கிருமிகளை அழிக்கிறது என்று ஒருசில ஆய்வுகள் கூறுகின்றன. உணவுகளை நீண்ட நேரம் கெடாமல் வெள்ளி பாத்திரம் பதமாக வைத்திருக்கும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உணவு விரைவாக செரிமானம் அடைவதற்கு உதவி செய்கிறது. அதோடு நமது உடலுக்குள் செல்லும் உணவை எரிக்கும் சக்தியையும் அதிகரிக்கிறது. ஆகவே, வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உடலில் உள்ள நிலையற்ற அணுக்களுடன் போரிட்டு நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வைத் தருகிறது. அதோடு பாதிப்படைந்த உடல் செல்களையும் மீண்டும் தூண்டி எழுப்பி நன்றாக இயங்க வைக்கிறது. மேலும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, ஆபத்தான நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது. உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளி உலோகத்துக்கு உண்டு.
மற்ற உலோகப் பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளி நச்சுத் தன்மையற்ற மற்றும் பாதுகாப்பான உலோகமாக இருக்கிறது. வெள்ளியில் இருக்கும் வேதியியல் பொருட்கள் உணவை கெட விடாமல் நீண்ட நேரம் பாதுகாக்கிறது. பிளாஸ்டிக் பாத்திரங்கள் தீங்கு தரக்கூடிய துகள்களை விரைவில் வெளிப்படுத்தும். ஆனால், வெள்ளிப் பாத்திரங்கள் எளிதில் துரு பிடிக்காது. அதனால் நமது உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய நச்சுப் பொருட்களை உருவாக்காது.
தீய பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையை வெள்ளிப் பாத்திரங்கள் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால் காற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்து உணவை வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்கின்றன. அதனால் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடும்போது அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடாமல் பாதுகாக்கிறது. மேலும், பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான பலவிதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது.
உணவில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை வெள்ளிப் பாத்திரம் அழிக்கக்கூடியது. முற்காலத்தில் பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் வெள்ளி நாணயங்களை போட்டு வைப்பார்கள். இத்தகைய நற்குணங்கள் கொண்ட வெள்ளி பாத்திரங்களை நம்மால் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.