நம் உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு குறைந்தபட்சம் ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். இடையூறில்லா அமைதியான தூக்கம் பெற இரவு உணவில் நாம் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதிகமான மசாலா பொருட்கள் சேர்த்து சமைத்த ஸ்பைசியான உணவுகளை உண்பது அஜீரணத்தை உண்டுபண்ணி தூக்கத்தைக் கெடுக்கக் காரணமாகிவிடும். எனவே, அவ்வாறான உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.
அதிகக் கொழுப்பு நிறைந்த, ஜீரணமாக கடினமான உணவுகளை உண்ணும்போது வயிற்றில் இரைச்சல், உப்புசம், அஜீரணம் போன்ற கோளாறுகள் உண்டாவது சகஜம். அப்போது தூக்கம் கெடுவது நிச்சயம். அப்படிப்பட்ட உணவுகளை இரவில் தவிர்ப்பது நலம்.
டீ மற்றும் ஹெல்த் ட்ரிங்க்ஸ் குடிப்பதும் தூக்கத்துக்கு இடையூறு விளைவிப்பவை. அவையும் தவிர்க்க வேண்டியவை.
இனிப்பு நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் உடம்பில் எனர்ஜியின் அளவு அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட நிலையிலும் தூக்கம் கெடுகிறது. இனிப்புக்கு 'நோ' சொல்லி படுக்கைக்கு செல்வதால் இனிமையான தூக்கம் கிடைக்கும்.
ஆல்கஹால் அருந்திவிட்டு தூங்கச் செல்வது, தூக்கத்துக்கு இடையூறு அளிப்பதுடன், அந்த இரவும் நிம்மதியற்றுக் கழியும். ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஆல்கஹாலை அறவே தவிர்ப்பது அதிக நலம் தரும்.
அசிடிக் உணவுகளையும், அமிலத் தன்மை கொண்ட ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களையும் உண்பது நெஞ்செரிச்சலை உண்டு பண்ணி தரமான உறக்கம் பெற தடையாயிருக்கும். இவற்றையும் இரவு உணவில் தவிர்ப்பது நலம்.
அதிகளவு புரோட்டீன் நிறைந்த உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, சுமாரான அளவு புரோட்டீன் கொண்ட உணவைத் தேர்ந்தெடுத்து உண்டு உறக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
உறங்கச் செல்லும் முன் அதிகளவு தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். இடையூறில்லா தொடர்ந்த தூக்கம் பெற இரவில் குறைந்தளவு நீர் அருந்துவதே சிறந்த பழக்கமாகும்.
மேற்கூறிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றி, ஊறில்லாத உறக்கம் பெறுவோம்; உடல் நலம் காப்போம்.