Do you know what is the measure of affection?
Do you know what is the measure of affection? https://www.amazon.in
வீடு / குடும்பம்

பாசத்தின் அளவுகோல் எது தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

ங்கள் பக்கத்து வீட்டு பாட்டி ஊர் திருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து பேரப்பிள்ளைகளுக்கும் பணம் கொடுத்து, ‘விரும்பியதை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார். குழந்தைகளும் பணத்தை வாங்கிச் சென்று விளையாடுவது, பிடித்ததை வாங்கிச் சாப்பிடுவது என்று குதூகலமாகத் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதில் ஒரே ஒரு பேத்தி மட்டும் பாட்டி காலுக்கு பொருத்தமான ஒரு செருப்பை வாங்கி வந்து பாட்டியிடம் கொடுத்தாள்.

பாட்டிக்கு அதைப் பார்த்ததும் கண்ணீர் மல்கியது. ‘எனக்கு ஏன் இதை வாங்கி வந்தாய்? நீ சந்தோஷமாக இருக்கத்தானே அந்தப் பணத்தைக் கொடுத்தேன். இது எனக்கு அவசியமா?’ என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், ‘பாட்டி உங்களுக்கு ரொம்ப வயசாகி விட்டது. இனிமேலாவது செருப்பு போட்டு நடக்கப்  பழகிக் கொள்ளுங்கள். அதற்காகத்தான் இதை வாங்கி வந்தேன்’ என்று கூறினாள்.

பாட்டிக்கு பாசத்தால் பேச முடியாமல் நா தழுதழுக்க, கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள் பேத்தியை. இப்படித் தன் மேல் ஒருவர் பாசமாக இருக்கிறார் என்பதை நினைக்கும்போதுதான் மனித உள்ளம் உணர்ச்சிப் பெருக்கால் மகிழும். அதன் பிறகு பாட்டி அந்த செருப்பைப் போட்டு நடந்து பழகிக் கொண்டார். அதோடு, அந்தப் பேத்தி மேல் அவள் தனி பாசம் கொண்டார்.

இந்த எண்ண அலைகளோடு இக்கதையைப் படிக்கும்பொழுது, எனக்கு அந்த நினைவு மலரும் நினைவுகளாய் மலர்ந்தன. இதோ நீங்களும் தெரிந்துகொள்ள அந்தக் குட்டிக் கதை.

ரசன் ஒருவன் தங்கத்தையும் வெள்ளியையும் பெட்டிகளில் எடுத்துச் சென்று ஏழைகளுக்கு வாரி வழங்கி வந்தான். அவனோடு சேவகன் ஒருவனும் செல்வான்.

ஒரு நாள் அரசனை ஏற்றிச் சென்ற யானைக்கு திடீரென்று மதம் பிடித்து விட்டது. அதனால் அது ஓடத் துவங்கியது. மக்கள் எல்லாம் யானையின் பின்னால் ஓடினார்கள். வெள்ளிக் காசுகள் இருந்த பெட்டி கீழே விழுந்தது. ஓடி வந்தவர்களில் பாதி பேர் நின்று விட்டார்கள். தங்கக் காசுகள் இருந்த பெட்டி விழுந்தது. இப்போது அனைவருமே நின்று விட்டனர்.

கடைசியாக, யானை மேலிருந்த அரசன் தூக்கி எறியப்பட்டான். அவனோடு அந்த சேவகனும் கீழே விழுந்தான். யானை ஓடிக்கொண்டே இருந்தது. எப்படியோ அரசனை சேவகன் காப்பாற்றி விட்டான். மயக்கம் தெளிந்து கண் விழித்த அரசன், ‘நீ மட்டும் ஏன் என் பக்கத்தில் இருந்தாய்? உனக்கு வெள்ளியும் தங்கமும் வேண்டாமா?’ என்றார்.

அதற்கு அந்தச் சேவகன், ‘வெள்ளியையும், தங்கத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், என் அரசனின் உயிரை என்னால் சம்பாதிக்க முடியாதே?’ என்றான். இதைக் கேட்ட அரசன், அந்த சேவகனை எப்போதும் தன்னோடு இருக்கும் அமைச்சர்களில் ஒருவனாக்கினான்.

‘உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை.’

- சாக்ரடீஸ்

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT