மழை பெய்தால் உங்கள் ஆடைகள் ஈரமாவது மட்டுமல்ல, சீக்கிரம் அழுக்காகி விடும் அபாயம் இருப்பதால் மழைக்காலத்தின்போது ஸ்டைலாக உடை அணிவது கொஞ்சம் சிக்கலானது. ஆனால், மழைக்காலத்தில் அணிய பொருத்தமான துணிகள் அதன் வண்ணங்கள் மற்றும் துணி மெட்டீரியல் பற்றி தெரிந்து கொள்வோம்.
மழைக்காலத்தில் வெளியில் செல்லும்போது சேறு, மண் படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதனால் உங்கள் உடைகளின் நிறமும் முக்கியமானது. கருப்பு, பிரவுன், பழுப்பு, சிவப்பு, பச்சை போன்ற நிறங்கள் அழுக்கு பட்டாலும் அதிகம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளும்.
மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு போன்ற பிற வண்ணங்கள் உங்கள் தோற்றத்தை பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடன் துடிப்பாகும் காட்ட உதவும் அதேநேரம் வெள்ளை மற்றும் வெளிர் வண்ணங்களை அணிவதை தவிர்க்கவும். ஏனெனில், மழையின் போது அவை அழுக்கு வெளிப்படையாக மாறும் அபாயம் உண்டு. நீங்கள் கருப்பு பேண்ட் அணிய விரும்பினால் அதை ஒரு பிரகாசமான நிற சட்டை அல்லது டாப்புடன் அணியுங்கள். அவை எடுப்பாக உங்களைக் காட்டும்.
மழைக்காலத்தில் உடைகள் நனைவதை தவிர்ப்பது சாத்தியமில்லாத விஷயம். ஈரப்பதத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க எளிதில் காயக்கூடிய மெல்லிய துணிகளை அணியுங்கள். சரியான வண்ணங்களை தேர்ந்தெடுப்பதோடு, அணிவதற்கு பொருத்தமான துணி மெட்டீரியல்களை தீர்மானிப்பது முக்கியம்.
பருத்தி, கைத்தறி மற்றும் கலவை துணியில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஈரப்பதம் மற்றும் மழைக்காலங்களில் மந்திரம் போல் வேலை செய்கின்றன. உடல் சூடு மற்றும் விசிறிகள் உதவியுடன் எளிதாகக் காய்ந்து விடும். இதனால் உடல் நீண்ட நேரம் நனைந்து குளிரில் நடுங்காது இருக்கும். கூடவே மழையில் நனையாமல் பாதுகாக்கும் ரெயின் கோட் அணிவதும் முக்கியம்.
உடலை ஒட்டி இருக்கும் ஆடைகள் அல்லது இருக்கமான பிட்டிங் ஆடைகளை ஈரத்துடன் நாள் முழுவதும் அணிந்து இருந்தால் உங்களை கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கும். கனமான டெனிம் ஆடைகளை தவிர்க்கவும். தளர்வான மற்றும் காற்றோட்டமான பிட்டிங் ஆடைகளை தேர்வு செய்யவும். இது மழைக் காலத்துக்கு ஏற்றதாக அமைகிறது. மேலும், இது உடலோடு ஒட்டாமல் சீக்கிரம் காயவும் வழி வகுக்கும். ஈரமான உடைகள் சருமப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.
மழைக்காலத்தில் என்ன மாதிரியான காலணிகளை அணிய வேண்டும்?
சரியான காலணிகளை தேர்ந்தெடுப்பது, சரியான ஆடையை தேர்ந்தெடுப்பது போலவே முக்கியமானது. மெல்லிய தோல் கேன்வாஸ் அல்லது மழையில் நனையக்கூடிய வேறு எந்த பொருட்களாலும் செய்யப்பட்ட காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும். குதிகால் மூடும்படியான ஸ்னீக்கர்களை அணிவது சரியான தேர்வாக இருக்கும். அதேபோல, தண்ணீர் புகாத பூட்ஸ் அணிவதும் நல்லது.
நீங்கள் அணிய தேர்ந்தெடுக்கப்படும் அணிகலன்கள் அதாவது பைகள் வளையல்கள் நெக்லஸ்கள் மோதிரங்கள் மற்றும் பிற நகைகள் நீர் எதிர்ப்பு திறன் (Water resistant)கொண்டவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.