இன்று அனுசரிக்கப்படும் தேசிய அன்ஃபிரண்ட் தினம் தனி நபர்கள் தங்கள் சமூக ஊடக இணைப்புகளைப் பற்றி சிந்திக்கவும் தங்கள் வாழ்வில் எதிர்மறையான பங்களிப்பை அளிப்பவர்களை அன்ஃபிரண்ட் செய்யவும் ஊக்குவிக்கிறது. அது ஏன் என்பது பற்றிய காரணங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எதிர்மறையான கருத்துக்கள்: சமூக வலைதளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தினமும் எக்கச்சக்கமான எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் யார் ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தாலும் உடனே அதை அக்செப்ட் செய்து கொள்வார்கள். தனக்கு இத்தனை நட்புகள் உள்ளன என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு பெருமிதம் உண்டாகிறது. ஆனால், நச்சுத்தன்மையுள்ள உள்ளடக்கத்தை தொடர்ந்து இடுகையிட்டு வீண் விவாதங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சம்பந்தமே இல்லாமல் ஒருவருடைய டைம் லைனுக்கு சென்று அங்கே கீழ்த்தரமான முறையில் கமெண்ட் செய்வது என்று நாகரிகமற்ற முறையில் பலர் நடந்து கொள்கின்றனர்.
அன்ஃப்ரெண்ட் செய்வதன் அவசியம்: ஒருவர் நல்ல விஷயங்களைப் பற்றி பதிவிட்டிருந்தாலும் அதிலும் மிக மோசமான கமெண்ட்களை போடுவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது. ஒருவிதமான கீழ்மையான குணத்தை இது குறிக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மன உளைச்சல்களும், நிம்மதியற்ற தன்மையும் நிலவுகிறது. எனவே, தயவு தாட்சண்யம் பார்க்காமல் அப்படிப்பட்ட ஆசாமிகளை அன்ஃபிரண்ட் செய்வது நல்லது மற்றும் அவசியமானதும் கூட. இந்த செயல் அர்த்தமுள்ள மற்றும் ஆதரவான சமூக ஊடக அனுபவத்தை வளர்ப்பதற்கும் ஆன்லைன் உறவுகளை நெறிப்படுத்துவதற்கும் உதவுகிறது. நட்பின் அளவை விட தரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான ஃபாலோவர்கள் மற்றும் தோழமைகள் இல்லாவிட்டாலும் குறைந்த அளவில் இருந்தாலும் நேர்மறையான பங்களிப்பை வழங்குபவர்களை மட்டும் ஊக்குவித்தால் போதும்.
நச்சுத் தன்மையுள்ள ஆசாமிகளை அன்ஃப்ரெண்ட் செய்வதால் உண்டாகும் பலன்கள்:
மனத்தெளிவும், மன ஆரோக்கியமும்: இணைப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதனால் டிஜிட்டல் பயன்பாட்டின் அளவை குறைக்க முடியும். இது மேம்பட்ட கவனம் மற்றும் மனத்தெளிவுக்கு வழிவகுக்கும். எதிர்மறையான விமர்சனங்களை, கமெண்ட்களை பின் தொடராமல் அவற்றைப் பார்க்காமல் இருக்கும்போது எதிர்மறையான எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபடலாம். அதனால் உணர்ச்சி ஆரோக்கியம் மேம்படும்.
மேம்படுத்தப்பட்ட உறவுகள்: நண்பர்களின் பட்டியலை கண்காணிப்பதன் மூலம் சமூக தொடர்புகளின் தரத்தை மேம்படுத்தலாம். மிகவும் முக்கியமான நல்ல நண்பர்களுடன் உண்மையான உறவுகளை பலப்படுத்தலாம்.
நேர மேலாண்மை: குறைவான இணைப்புகள் இருந்தால் ஸ்க்ரோலிங் செய்வதில் ஏற்படும் நேரம் குறையும். இது ஆன்லைன் செயல்பாடுகளில் சிறந்த நேர மேலாண்மைக்கு வழிவகுக்கிறது. பயனுள்ள விஷயங்களில் மனதை செலுத்த உதவுகிறது.
தனியுரிமை கட்டுப்பாடு: தனிப்பட்ட தகவல் மற்றும் சமூக இணைப்புகளை நெறிப்படுத்துவது ஒருவரின் தனி உரிமையை மேம்படுத்தும். மனப்பதற்றம் அழுத்தம் போன்றவை குறையும். பிறருடன் ஒப்பிடுவது போன்ற உணர்வுகளை குறைத்து சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான ஒட்டுமொத்த கவலையையும் குறைக்கலாம். ஆன்லைன் இருப்பின் மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வது அதிகாரம் அளிக்கும் முறையை விளக்குகிறது. நம் வாழ்க்கையில் விரும்பும் நபர்களைப் பற்றிய தேர்வுகளை பிரதிபலிக்கிறது.
சோசியல் மீடியா டீடாக்ஸ்: தேசிய அன்ஃப்ரெண்ட் தினம் ஒரு பரந்த சமூக ஊடக நச்சுத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த சிறந்த மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ஆன்லைன் பழக்க வழக்கங்களை மறு மதிப்பீடு செய்ய தனி நபர்களை ஊக்குவிக்கிறது. மேலும், தனி நபர்கள் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் உள்ளடக்கத்தை பற்றிய அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்துகிறது.
எல்லைகளை அமைத்தல்: ஆன்லைனில் குறிப்பிட்ட எல்லைகளை அமைத்து அதில் பயணிக்க வேண்டும். தேவையில்லாத கருத்துக்களை கமெண்ட்களை பதிவு செய்வோரை உடனடியாக அன்ஃபிரண்டு செய்துவிடலாம்.