வீடு / குடும்பம்

காப்பி கிடைக்காத ஊரில் குடியிருக்க வேண்டாம்!

கே.என்.சுவாமிநாதன்

லைப்பு எழுதும் போதே சந்தேகம். காப்பி என்று “ஸ்ட்ராங்க்” ஆக எழுதுவதா அல்லது காபி என்று “லைட்” ஆக எழுதுவதா என்று. தமிழில் எழுதலாம் என்று கூகுளிடம் உதவி கேட்டேன். தமிழில் ‘கொட்டை வடி நீர்” என்றது. வேண்டாம், காப்பி குடிக்கும் ஆசையே போய் விடும். காப்பி “ஸ்ட்ராங்க்” ஆக இருந்தால் “பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கே” என்று சொல்லத் தோன்றும் என்பதால் காப்பி என்றே எழுத முடிவு செய்து விட்டேன்.

வண்டி ஓட பெட்ரோல் தேவை. அன்றைய நாள் வேலை சீராக முடிய காலை காப்பி நன்றாக இருக்க வேண்டும். அலுவலகத்திலும் நடுவில் சரியான நேரத்தில் காப்பி வரவில்லை என்றால் வேலை ஓடாது.

காப்பியின் தரம் நன்றாக இருக்க நல்ல பால், அளவான சக்கரை இவற்றுடன் முக்கிய பங்கு வகிப்பது காப்பிப் பொடி. “பீபெரி ஏ” அல்லது “பீபெரி பி” அல்லது இரண்டும் கலந்தது. இவற்றுடன் சிக்கரி கலந்தால் தான் டிகாக்சன் கெட்டியாக இருக்கும். இல்லையென்றால் காப்பி தண்ணீர் தான். சிக்கரி அதிகமாகவும் இருக்கக் கூடாது. பொடியில் தான் எத்தனை வகைகள். ஆனால் காப்பிப் பொடியே இல்லாமல் காப்பி போடும் கலையை நன்கு அறிந்தவர்கள் புகை வண்டியில் காப்பி விற்பவர்கள்.

நீங்கள் காப்பிப் பிரியர் என்று மற்றவர்களுக்குத் தெரிந்தால் அனர்த்தம் தான். அவர்கள் வீட்டிற்குச் சென்றால் நீங்கள் கேட்காமலே காப்பி வந்து விடும். அந்தக் காப்பி நன்றாக இல்லை என்றால், முகம் அஷ்ட கோணலாக, கஷ்டம்தான்.

ஒருமுறை நண்பர் வீட்டில் காப்பி படு சுமாராக இருந்ததால், சுவையை மாற்ற உடனே தண்ணீர் குடித்தேன். “சூடான பானத்திற்குப் பின் குளிர்ந்த நீர் குடிப்பது தொண்டையை பாதிக்கும், தெரியாதா” என்றான் நண்பன். பழகிவிட்டது என்று சமாளித்தேன். மாலையில் இருவரும் சிற்றுண்டி விடுதி சென்றோம். காப்பி அருமையாக இருந்தது. இன்னொன்று குடிக்க வேண்டும் போல் இருந்தது. நண்பன் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் தண்ணீர் குடித்தேன். இன்றும் அந்த நண்பனுடன் வெளியே சென்று காப்பி அருந்தும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயம்.

பெங்களூர் செல்லும் போதெல்லாம் “பிராமின்ஸ் கபே” தேடி ஓடுவேன் ஒரு கப் காப்பிக்கு. காலை பன்னிரெண்டு மணிக்கு அங்கு சென்றால் வீட்டிற்குப் பொருட்கள் வாங்க வந்த மூத்த குடிமக்களைக் காணலாம். சர்க்கரை வியாதி என்று வீட்டில் காலையில் காப்பி குடிக்க அனுமதி இருந்திருக்காது, ஆகவே இங்கு வந்து வீட்டிற்குத் தெரியாமல் காப்பி சாப்பிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

காப்பியை மூன்று நதியும் சந்திக்கும் திரிவேணி சங்கமம் என்று கற்பனை செய்து புலவர் முத்துசுவாமி ஐயர் பாடியுள்ளார். இவரது கற்பனைக்கு வெள்ளை நிறப் பால் கங்கை நதியாகவும், காப்பிப் பொடியும், வெண்ணீரும் கலந்த கலவை யமுனை நதியாகவும், எங்கு கரைந்து இருக்கிறது என்று சொல்ல முடியாத சர்க்கரை சரஸ்வதி நதியாகவும் தோற்றமளிக்கிறது.

பாலங்கு கங்கையா பண்பார் கஷாயமே

ஏறுங்கரிய யமுனையா – சாலக்

கறைந்துறையும் சீனி சரஸ்வதியாம் கங்கை

தரந்தெரி முக் கூடற்றலம்.

மேலை நாடுகள் சென்றாலும் நம் ஊர் பில்டர் காப்பிக்கு மனம் ஏங்கும். நம்ம ஊர் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு, அமெரிக்காவின் “ஸ்டார்பக்ஸ்”, கனடாவின் “டிம் ஹார்டன்ஸ்”  மற்றும் இத்தாலியின் “எக்ஸ்ப்ரஸ்ஸோ” காப்பிகள் ஈடாகுமா என்றால், நிச்சயமாக இல்லை. என்னுடைய அனுபவத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களில் பில்டர் காப்பி சாப்பிடலாம். மற்ற இடங்களில், நெஸ்காப்பி தான் சிறந்தது.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT