சுருக்கமாக மினிமலிசம் என்றால், அதிகப்படியான பொருட்கள் அல்லாமல் குறைந்த பொருட்களைப் பயன்படுத்தியே வாழும் வாழ்க்கை முறையாகும்.
அந்த காலத்தில் ஒருவரிடம் பணம் சேர்ந்தால் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்களாம். ஆனால் இன்றைய நவீன உலகில், நம்மிடம் சிறிது பணம் சேர்ந்தாலே என்ன பொருள் வாங்கலாம் என்று தான் யோசிக்கிறோம். அதாவது நம்மில் பெரும்பாலானவர்கள் Materialistic மனநிலையில் தான் இருந்து வருகிறோம். அப்படி நமது வீட்டில் அதிகமாக வாங்கிக் குவிக்கும் பொருட்களின் மதிப்பு காலப்போக்கில் குறைவது மட்டுமின்றி, நம்முடைய மனநிலையும் பாதிக்கிறது என்கின்றனர்.
உண்மையிலேயே மினிமலிசக் கொள்கையைப் பின்பற்றினால் வாழ்க்கை மேம்படுமா? என்றால், 'ஆம்' என்பதுதான் என்னுடைய பதிலாக இருக்கும். இதை பல விதங்களில் விஞ்ஞானிகள் நிரூபித்தும் உள்ளனர்.
வீட்டில் அதிகமாக பொருள் இருந்தால் நம்முடைய மன அழுத்த ஹார்மோனான Cortisol அதிகமாகச் சுரந்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒரு ஆய்வில், அதிக பொருட்களுடன் ஒரு வீட்டில் வாழ்பவர்களுக்கு, குறைந்த பொருட்களுடன் ஒரு வீட்டில் வாழ்பவர்களை விட Cortisol-ன் அளவு அதிகம் சுரப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஹார்மோனை நாம் ஏன் கவனிக்க வேண்டுமென்றால், மனச்சோர்வு, தலைவலி, தசைவலி, இதயநோய், செரிமானப் பிரச்சனைகள், கவலை, தூக்கப் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு இந்த ஹார்மோனின் அளவு அதிகரிப்பதே காரணமாக இருக்கிறது.
மினிமலிசக் கொள்கையைக் கடைபிடிக்கும் ஒருவருடைய உற்பத்தித்திறன் வெகுவாக அதிகரிக்கும். ஏனென்றால், ஒரு வீட்டில் அதிகமாக பொருட்கள் இருந்தால், நமது பார்வையின் எல்லைக்குள் இருக்கும் பொருட்களை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். எனவே ஒரு செயலின் மீது கவனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அறையில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் நம் கவனத்தை திசை திருப்ப வாய்ப்புள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில், காலப்போக்கில் அது உங்களுடைய உற்பத்தித்திறனை குறைக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே நீங்கள் வேலை செய்யும் அறையில் அதிக பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மேலும் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பதால், செலவும் வெகுவாகக் குறைகிறது. அதே நேரம் வேலையில் அதிக கவனம் செலுத்துவது மூலமாக, நமது வாழ்க்கைத் தரம் மற்றும் திறமைகள் உயரும். இதனால் நமது வாழ்வில் மகிழ்ச்சியும் திருப்திகரமான உணர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது.