மழை வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு இன்சூரன்ஸ் பண பெற செய்ய வேண்டியவை என்ன.
சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத தொடர் மழை ஒட்டுமொத்த வாழ்க்கை சூழலையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. அதிகப்படியான மழை காரணமாக அரசும் செய்வதறியாது திகைத்துள்ளது. அதே நேரம் அதிகப்படியான மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவிற்கும் அல்லது அதற்கு மேலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் பல்வேறு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதே இச்செய்தி.
மிகப் பெரும்பான்மையான இன்சூரன்ஸ் திட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பும் உள்ளடங்கி இருக்கும். எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் வெள்ளத்தில் வாகனம் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து வைத்திருப்பது கூடுதல் ஆவணமாக இருக்கும். அதே சமயம் இப்புகைப்படம் கட்டாயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்சூரன்ஸ் செய்துள்ள நபர்களின் இன்சூரன்ஸ் படிவம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மின்னஞ்சலி பெரும்பாலும் இன்சூரன்ஸ் படிவம் இருக்கும் அல்லது சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பெயர், விவரம் மற்றும் தொலைபேசி எண்ணை தெரிவித்தால் நாம் செய்துள்ள இன்சூரன்ஸ் சம்பந்தமான படிவம் முழுமையாக கிடைத்துவிடும்.
மழை வெள்ள நீர் வடிந்த பிறகு வாகனத்தை இன்சூரன்ஸ் செய்துள்ள நபர் ஸ்டார்ட் செய்ய முற்பட வேண்டாம். ஏனென்றால் ஸ்டார்ட் செய்ய முற்படும்பொழுது இன்ஜினில் அதிக அளவிலான தண்ணீர் சென்று முழுமையாக சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இப்படி ஸ்டார்ட் செய்யப்பட்டு இஞ்சின் பாதிக்கப்பட்டால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஸ்டார்ட் செய்ய முற்படாமல் உடனடியாக காப்பீட்டாளரை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது சேவை எண்ணை அழைக்க வேண்டும். அல்லது காப்பீடு செய்துள்ள நிறுவனத்தின் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும் அல்லது ஈமெயில் வழியாகவும் இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியும்.
இன்சூரன்ஸ் கிளைம் படிவத்தை பூர்த்தி செய்து அல்லது இமெயில் வழியாக சமர்ப்பித்து கிளைம் டிக்கெட் எண்ணை பெற வேண்டும். பிறகு வாகனத்தை ஆய்வு செய்து வங்கி கணக்கில் தொகை பதிவு செய்யப்படும்.