வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வீட்டினுள் உஷ்ணத்தை தணித்து, நிம்மதியான சூழலில் இருக்க சில ஆலோசனைகளைக் காண்போம்.
* மதிய வெயில் உக்கிரமடைய துவங்கும்முன் வீட்டின் ஜன்னல் கதவுகளை மூடிவிடுங்கள். இது வெப்பக் காற்று வீட்டிற்குள்ளே வருவதைத் தடுக்கும்.
* அனல் காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் அனல் வீட்டினுள் வராமல் இருக்கும். ஜன்னல் திரைகள் உபயோகித்தால் அதை முழுவதும் இறக்கி வைத்துவிடுங்கள்.
* மாலை நேரத்தில் அந்தக் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்துவைத்து குளிர்ந்த காற்று வீட்டினுள் நுழையும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
* கொசுக்கள் தொல்லைக்காக சில வீடுகளில் எப்போதுமே ஜன்னல், கதவுகளை மூடியே வைத்திருப்பார்கள். இது வீட்டில் புழுக்கத்தை உருவாக்கும். அதனை தவிர்க்க ஷேடுகளில் ‘வென்டிலேட்டர்’ ஃபேன் பொருத்தி உள்ளே இருக்கும் வெப்பக் காற்றை வெளியேற்றலாம்.
* ஜன்னல்களுக்கு வெளியே சன் ஷேடுகள் வைத்தால், அது சூரிய ஒளியை வீட்டினுள் அனுமதிக்காது.
* பகல் நேரத்தில் வீட்டில் மின்சார விளக்கை பயன்படுத்தாதீர்கள், முடியாதபட்சத்தில் குறைவாகப் பயன்படுத்துங்கள். வெப்பம் அதிகமாக உமிழும் விளக்குகளைப் பயன்படுத்தாதீர்கள்! புளோரசன்ட் பல்புகளைப் பயன்படுத்துங்கள். அது வீட்டினுள் வெப்பம் தராது. மின்சாரமும் குறைவாகச் செலவாகும்.
* வீட்டினுள் உஷ்ணத்தை உருவாக்கும் சமையல் கருவிகள் (இன்டக் ஷன் ஸ்டவ் போன்றவை), சுத்தம் செய்யும் கருவி, வாஷிங் மெஷின் போன்றவற்றை காலையிலோ அல்லது சூரியன் மறையும் மாலை நேரத்திலோ இயக்குவது நல்லது.
* வீட்டினுள் சிலிங் ஃபேன்கள் 4 டிகிரி வரை வீட்டைக் குளுமைப்படுத்தும், ரூம்களுக்குத் தகுந்தபடி ஃபேன்களின் அளவு இருக்க வேண்டும். பெரிய அளவிலான அறைகளில் சின்ன ஃபேன் இருந்தால் அறையில் வெப்பம் எப்படிக் குறையும்?
* வீட்டில் உள்ள சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன் இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகித்தால், சீலிங் ஃபேன் காற்றை அறை முழுதும் பரப்பும், டேபிள் ஃபேன் எல்லா திசைகளிலும் இந்த காற்றை சுழலச் செய்யும். இவ்வாறு செய்தால் ரூமின் ஏர் சர்குலேஷனை சரி செய்யும்.
* சமையல் அறையைத் தவிர்த்து படுக்கை அறையில் எக்சாஸ்ட் ஃபேன்கள் வைத்துக்கொள்வது வீட்டினுள் இருக்கும் உஷ்ணத்தை வெளியேற்றும். அதற்காக அதை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது.
* வீட்டினுள் சுவர்களுக்கு லைட் ஷேட் கலர்களைப் பயன்படுத்துங்கள் கிரீம், வெள்ளை மற்றும் பேஸ்டல் கலர்களைப் பயன்படுத்துங்கள்! கருப்பு மற்றும் சிவப்பு போன்ற டார்க் கலர்கள் உஷ்ணத்தை வீட்டினுள் இழத்துக் கொள்ளும்.
* வீட்டைச் சுற்றி மரங்கள், செடி, கொடிகள் இருந்தால் நல்லது. அது வெப்பத்தை வீட்டினுள் செல்ல விடாது. வீட்டை சுற்றி பச்சை பசேல் என்று இருந்தால் அது கண்களுக்கும், மனதிற்குள்ளும் குளிர்ச்சியைத் தரும்.
* உல்லன் படுக்கைகளைப் பயன்படுத்தாதீர்கள். தரை விரிப்புகள் கம்பளியில் இருந்தால் அவற்றை எடுத்துவிட்டு காயர் மேட் அல்லது சனல் விரிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
* செயற்கை நார்களைப் பயன்படுத்தி உருவான படுக்கைகள், சீட்களில் உட்காராதீர்கள். காட்டன் படுக்கைகள் மற்றும் சீட்களை பயன்படுத்துங்கள். உங்கள் உடைகளையும் காட்டனுக்கு மாற்றுங்கள்.
* வீட்டினுள் தரையை தினமும் இரண்டு முறை நீர் விட்டு கழுவி வாருங்கள். இது, வீட்டினுள் குளுகுளுவென இருக்க உதவும்.
* மாடியில் குடி இருப்பவர்கள் வீட்டின் கூரையாக இருக்கும் தளத்தை இரவில் நீரை தெளித்து குளிர்ச்சிப்படுத்தலாம்.
* தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். கோணிப்பைகள் தென்னை நார்களால் தயாரிக்கப்பட்டிருத்தல் நலம். இதன் மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும் வரை நிரந்தரமாக பந்தல் போட்டு வைக்கலாம்.