சென்னையில் சில நாட்களுக்கு முன்பு வந்த மிக்ஜாம் புயல், நம்மை எல்லாம் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. சென்னை கடலோர பிரதேசமாக இருப்பதால், இத்தகைய வங்கக்கடல் காற்றழுத்த மையங்கள் அவ்வப்போது நிகழ்ந்து, நமக்கு புயல் வருவதற்கு வாய்ப்புள்ளது. மின்சாரம் இரத்து, வீட்டிலேயே முடங்கிக் கிடத்தல், வீட்டுக்குள் தண்ணீர் வருதல் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்கள் உள்ளானார்கள்.
நாம் இத்தகைய புயல்களை எதிர்கொள்ள எவ்வாறு தயார் செய்வது என்பதைக் குறித்துப் பார்ப்போம்.
முன்கூட்டியே மாடித் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். மின்சாரம் தடையினால், தண்ணீர் பிரச்சனை வராமல் காக்கும்.
தேவையான அளவு குடிநீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் வீதமாக தண்ணீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
பிஸ்கட், ரஸ்க், பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு போன்ற தின்பண்டங்கள், கெடாத உணவு வகைகளைத் தயார் செய்துக் கொள்ள வேண்டும். பழங்கள் போன்றவற்றையும் வாங்கி வைத்திருக்கலாம். நூடுல்ஸ் போன்ற எளிதில் தயாரிக்கும் உணவு வகைகளையும் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். சமைக்காமல் உண்ணும் உணவு வகைகளையும் வைத்திருக்கலாம்.
வயிற்று வலி, காய்ச்சல், ஜலதோஷம், பிளாஸ்திரி போன்ற அடிப்படை மருந்துகளை அடங்கிய முதலுதவிப் பெட்டியைத் தயார் செய்ய வேண்டும்.
நமது முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் விளக்கு, தீப்பெட்டி, அகல்விளக்கு போன்ற வெளிச்சத்திற்கான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
டார்ச்லைட் வைத்திருந்தால் அதற்கான பேட்டரிகளை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். எமர்ஜென்சி விளக்கு இருந்தால், அதனை மின்னேற்றி வைத்திருக்க வேண்டும்.
கைப்பேசி போன்றவற்றை மின்னேற்றம் செய்ய, பவர் பேங்க் போன்றவற்றை முழுவதுமாக மின்னேற்றி வைத்திருக்க வேண்டும்.
தனிநபர் சுத்தம் சார்ந்த பொருட்களான பல்துலக்கி, பற்பசை, சோப்பு, டிஷ்யூ, மாதவிலக்கு சார்ந்த பொருட்கள் போன்றவற்றை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும்.
வீட்டில் மின்சாரம் வருவதற்கு நேரமாகலாம். வெளியே செல்ல தாமதமாகலாம். வீட்டினுள் விளையாடுவதற்கு ஏதுவாக அட்டை விளையாட்டுக்களை எடுத்து வைத்துக் கொள்வதன் மூலம், குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியும். புயலினை அமைதியாக எதிர்கொள்ள உதவும்.
வீட்டின் எல்லா மின்சாதனங்களையும் மின்சார இணைப்பிலிருந்து கழற்றி வைத்துவிடுவதன் மூலம், மின்குறுக்கினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
குறிப்பிட்ட ஜன்னல்களை மட்டும் திறந்துவைப்பதன் மூலம், அதிக மழைச்சாரல் வீட்டுக்குள் வருவதை தவிர்க்கலாம்.
போதுமான அளவு பணத்தை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். அவசரமாக சாமான்கள் வாங்க அது உதவும்.
முக்கிய தொலைப்பேசி எண்களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கு அழைக்க உதவும்.
போர்வைகள், உடைகள் போன்றவற்றை தயார் செய்துக் கொள்ள வேண்டும். குளிரிலிருந்து காக்க போர்வைகள், முழுக்கைசட்டை போன்ற குளிருக்கு ஏற்ற உடைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
வீட்டில் மாடி வீடு இருப்பின், முக்கியமான பொருட்களை மாடி வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுவதன் மூலம், அவற்றைக் காக்க முடியும்.
வீட்டில் இன்வெர்ட்டர் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மின்சாரத் தடையின் போது, சமாளிக்க உதவும்.
கொசுக்கடிகளை சமாளிக்க, கொசுக்கடி களிம்பை வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும், கொசுவலை போன்றவற்றையும் வைத்திருக்க வேண்டும்.
வாகனங்களில் போதுமான அளவு எரிபொருள் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸ், கிரண்டைர் போன்றவற்றால் தயாரிக்கும் இட்லி மாவு போன்றவற்றை போதிய அளவு தயார்செய்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நம்மைத் தயார் செய்துக் கொள்வதன் மூலம், புயலினை நம்மால் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.