உலகெங்கிலும் பலவிதமான உணவு வகைகள் இருப்பினும், இந்தியன், சைனீஸ், இத்தாலியன் போன்ற பாரம்பரிய உணவு வகைகளுக்கு என்றுமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்த இந்தியர்களால், மற்ற நாட்டினருக்கும் பரவத் தொடங்கிய இந்திய உணவுகளின் புகழ், தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகிறது. அத்தகைய உணவு வகைகள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிரியாணி: இந்தியாவில் பிரபலமாக இருந்துவரும் பிரியாணிக்கு வெளிநாட்டிலும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். வெளிநாட்டு மக்களுக்கு இந்திய பிரியாணியின் ருசி மிகவும் பிடிக்கும். இந்தியாவில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட விதவிதமான பிரியாணி வகைகள் உண்டு. தலப்பாகட்டி, ஹைதராபாதி, ஆம்பூர், காஷ்மீர், லக்னோ என எண்ணற்ற வகைகளில் இங்கே பிரியாணி கிடைக்கும். இதை வெளிநாட்டினரும் விரும்பி உண்கின்றனர்.
நாண்: வட இந்தியாவில் பிரபலமாக மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுதான் இந்த நாண். மைதா மாவில் எள்ளு, மல்லித் தழை, ஈஸ்ட் போன்றவை சேர்க்கப்பட்டு நெருப்பில் சுட்டு சமைக்கப்படும் ரொட்டிதான் இது. இதன் மேற்பரப்பில் தடவப்படும் வெண்ணெய் இதற்கு கூடுதல் சுவை தருகிறது. இதன் காரணமாகவே வெளிநாட்டில் இது மிகவும் பிரபலம்.
சமோசா: மழைக்காலத்தில் சூடாக ஒரு கப் டீ குடித்துக் கொண்டே சமோசாவை உண்பது சொர்க்கத்துக்கு நிகரான உணர்வைக் கொடுக்கும். உருளைக்கிழங்கு, சிக்கன், பன்னீர், காய்கறி, வெங்காயம் போன்ற ஸ்டஃபிங்கை உள்ளே வைத்து செய்யப்படும் இந்த சமோசா, இந்தியா மட்டுமின்றி அதைத் தாண்டி உலக நாடுகள் பலவாலும் பிரபலமாகப் பேசப்படும் ஒரு உணவு வகையாகும்.
தோசை: இந்தியாவில் பிரபலமான உணவாக இருக்கும் தோசை அரிசி, உளுந்து சேர்த்து செய்யப்படும் ஒரு உணவாகும். இதில் மசால் தோசை எனப்படும் ஒரு வகை தோசையின் நடுவே உருளைக்கிழங்கு மசாலா வைத்து பரிமாறப்படும். அதன் சுவை அபாரமாக இருக்கும். இதை சாம்பார் மற்றும் சட்னியில் தொட்டு சாப்பிட்டால் அதன் ருசியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வெளிநாட்டவர்களும் இதன் ருசிக்கு அடிமையாகி விட்டார்கள் எனலாம்.
பில்டர் காபி: காபி உலகெங்கிலும் பிரபலமான பானமாக இருந்தாலும், இந்தியாவின் காபி, குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் பில்டர் காபி வெளிநாட்டிலும் பிரபலமாக உள்ளது. இது மற்ற காபியை விட தனித்துவமான சுவை கொடுப்பதால், வெளிநாட்டவர்கள் பலரும் இதை விரும்பிக் குடிக்கின்றனர்.
பெரும்பாலும் மேற்கூறிய எல்லா உணவுகளுமே வெளிநாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவுகள் ஆகும். இந்த உணவுகள் இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டவர்களையும் ஈர்த்திருப்பது ஆச்சரியம்தான்.