phobia https://www.gipshospital.com
வீடு / குடும்பம்

மிகவும் விசித்திரமான 8 வித ஃபோபியாக்கள் பற்றி தெரியுமா?

தி.ரா.ரவி

ங்கிலத்தில், ‘ஃபோபியா’ எனப்படுவது ஒரு பொருள், சூழ்நிலை அல்லது ஏதாவது ஒன்றைப் பார்த்தால் வரும் பயம். ஃபோபியா உள்ள ஒருவர் கடுமையான பயத்தையும் பதற்றத்தையும் அனுபவிப்பார். சிலருக்கு பாம்பு, மலை உச்சி அல்லது இரத்தத்தைக் கண்டால் பயம். ஆனால், குளிப்பதற்கும் கண்ணாடியை பார்ப்பதற்கும் பயப்படும் மனிதர்களும் உண்டு. இதுபோன்ற அரிதான விசித்திரமான பயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விசித்திரமான ஃபோபியாக்கள்:

1. அரித்மோ ஃபோபியா: பலருக்கு கணிதம் என்றாலே பயம். ஆனால், அரித்மோ ஃபோபியா உள்ளவர்களுக்கு எண்களின் மீது உண்மையான பயம் இருக்கும். எண்களை பார்த்தாலே பயப்படுவார்கள். இவற்றை கையாளாமல் பல வேலைகள் மற்றும் தொழில்களை செய்வது கடினம் என்பதால் சம்பந்தப்பட்ட நபரின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும்.

2. ப்ளூட்டோ ஃபோபியா: பணம் இல்லையே என்று கவலைப்படுவோர் அனேகம் பேர். ஆனால், பணம் வந்து விட்டால் அதை வைத்து என்ன செய்வது என பணத்தை சமாளிக்கப் பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். இதனால் இவர்களுடைய தொழில் பாதிக்கப்படும். தாங்கள் செல்வந்தர் ஆகிவிட்டால் அதை எப்படி காப்பாற்றுவது என்கிற மன அழுத்தம் அல்லது திருட்டுப் போய்விடுமே என்ற பயம் அவர்களிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

3. சாந்தோ ஃபோபியா (Xantho phobia): இவர்கள் பொதுவாக மஞ்சள் நிறத்தில் என்ன பொருள் இருந்தாலும் அதைப் பார்த்து பயப்படுவார்கள். மஞ்சள் நிறப் பூக்கள், மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆடைகள், உணவுகள், பள்ளி கல்லூரி பேருந்துகள் போன்றவற்றை தவிர்ப்பார்கள். இவர்களை இந்த பயம் இவர்களது அன்றாட வாழ்வில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால், மஞ்சள் நிற பொருட்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

4. அப்லூட்டோ ஃபோபியா (Abluto phobia): பொதுவாக, தன்னை சுத்தம் செய்து கொள்வதற்கும் குளிப்பதற்கும் பயப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குளிப்பதைத் தவிர்ப்பதால் விரும்பத்தகாத உடல் துர்நாற்றம், மேலும் சமூகத் தனிமைப்படுத்தலுக்கு ஆளாகிறார்கள். குளிக்கும்போது அவர்கள் பதற்றம், பயம் போன்றவற்றை அனுபவிப்பார்கள்.

5. ஆக்டோ ஃபோபியா: எட்டு என்ற எண்ணின் மீது பயம். முகவரிகள், விளம்பரங்கள் போன்றவற்றில் எழுதப்பட்டுள்ள எட்டைப் பார்த்து அஞ்சுவார்கள். எட்டாம் தேதி, எட்டாவது மாதம் என 8 சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் விலக்குவார்கள்.

6. ஆப்டோ ஃபோபியா: கண்களைத் திறக்கும் பயம். இது மிகவும் பலவீனமான நபருடைய பயம். ஏனென்றால், ஒரு நபர் தன்னுடைய கண்களைத் திறக்காமல் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம். இந்த பயமுள்ளவர்கள் வீட்டுக்குள் மங்கலான வெளிச்சம் உள்ள பகுதிகளில் தங்க விரும்புவார்கள். இது ஒரு வகையான கவலைக் கோளாறுடன் தொடர்புடையது. இது ஒரு அதிர்ச்சிகரமான, ஆழமான சம்பவத்தின் விளைவாகும்.

7. போகோனோ ஃபோபியா (தாடி பயம்): தாடி வைத்த நபரைப் பார்த்தாலே பயப்படுவார்கள். அவர்களைத் தவிர்ப்பார்கள். தாடி வைத்த நபரின் படத்தைப் பார்க்கக்கூட தயாராக இருக்க மாட்டார்கள்.

8. இசோப்ட்ரோ ஃபோபியா: (Eisoptrophobia (கண்ணாடிகளின் பயம்): சிலர் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்க பயப்படுவார்கள். இது ஒரு மூடநம்பிக்கையிலிருந்து உருவாகி இருக்கலாம். கண்ணாடி துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்று நினைப்பார்கள். மேலும், தனது உடல் தோற்றத்தைப் பார்க்க வெட்கப்படுவார்கள்.

இந்த மாதிரி அசாதாரணமான பயங்களை உடையவர்களை சிகிச்சைக்கு உள்ளாக்க வேண்டும். இது உண்மையில் கவலைப்பட வேண்டிய விஷயம் ஆகும். எனவே, இவர்கள் தகுந்த நிபுணரின் சிகிச்சையின் மூலமே இவற்றில் இருந்து விடுபட முடியும்.

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT