நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவை நம் தூக்கத்தை பாதிக்கின்றன. 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் இருந்தால்தான் பகலில் நம்மால் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக நம் வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும்.
1. ஒவ்வொரு இரவும் சரியாக தூங்காமல் தவிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி நம்மால் சரியாக தூங்க முடியாமல்போனால் மன அழுத்தமும், சோர்வும் ஏற்படும். சரியான தூக்கம் இல்லை என்றால் கண்களைச் சுற்றி கருவளையமும், முடி உதிர்வு பிரச்னையும் ஏற்படும்.
2. இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது காலாற நடந்து விட்டு படுக்கைக்குச் செல்ல நல்ல பலன் கிடைக்கும்.
3. ஸ்மார்ட் ஃபோன்களை படுக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு அணைத்து விடுவது நல்லது. ஒளியைக் கண்டதும் நம் மூளை காலை நேரத்து ஹார்மோன்களை தூண்டிவிடும். படுக்கப் போகும்போது போனை சைலன்ட் மோடில் வைத்து விடுவது நல்லது.
4. உணவுப் பழக்கம் மிகவும் முக்கியம். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்வது தவறு. ஏழரை மணிக்குள் 4 இட்லி அல்லது 2 தோசை அல்லது 2 சப்பாத்தி என அரை வயிற்றுக்கு சாப்பிட்டு சூடான பால் அருந்த, நல்ல உறக்கம் வரும்.
5. அநாவசிய வாக்குவாதங்கள், சண்டை ஆகியவற்றை தவிர்த்து விடுவது நல்லது. நிம்மதியான தூக்கம் வேண்டுமானால் அமைதியான மனநிலை வேண்டும்.
6. நம் படுக்கை விரிப்புகளில் ஒரு துளி லாவண்டர் தெளித்து விட்டால் போதும். மனம் அமைதியாகி நல்ல உறக்கம் வரும். அரோமா தெரபி சிறந்த பலனளிக்கும்.
7. வயதுக்கு தகுந்தாற்போல் எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். யோகா, உடற்பயிற்சி செய்ய காலை நேரம் ஏற்றது. படுக்கப் போகும் முன் இரண்டு நிமிடம் மனம் அமைதி பெற தியானம் செய்வது மிகவும் நல்லது.
8. வாரம் ஒரு முறை உடல் சூடு குறைய எண்ணெய் குளியல் செய்வது அவசியம். இது உடம்பு ரிலாக்ஸ் ஆகி நமக்கு அமைதியான மனநிலையை அளிக்கும்.
9. படுக்கப் போகும் முன் மனதுக்கு இதம் தரும் வகையில் நல்ல இசையை கேட்பதும் சிறந்த பலனளிக்கும்.
10. படுக்கை அறையில் அதிக வெளிச்சம் வராமல் திரைச் சீலைகள் போட்டு, விளக்குகளை அணைத்து ஒரு ரம்யமான சூழ்நிலையை அமைத்துக் கொள்வது அவசியம். முக்கியமாக, உடலை இறுக்கமாக வைத்துக் கொள்ளாமல் தளர்த்திக் கொண்டு ஆழமாக சுவாசித்தல் வேண்டும். அதாவது மூச்சை விடும்போது நம் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆவதை நம்மால் உணர முடிந்தால் இரண்டே நிமிடத்தில் உறக்கம் வந்துவிடும்.
உறக்கம் எளிதில் வர சில பாட்டி வைத்தியம்:
1. ஒரு கொத்து மருதாணி பூவை தலையணைக்குள் வைத்து படுக்க நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
2. ஒரு சொட்டு விளக்கெண்ணையை படுக்கப்போகும் முன் உச்சந்தலையில் வைத்து சிறிது தேய்த்துவிட்டு படுங்கள்.
3. வெதுவெதுப்பான பாலில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவிட்டு படுக்க நல்ல உறக்கம் வரும்.
4. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு படுப்பது நல்ல பலனைத் தரும்.
5. வாதுமை கொட்டையில் மெலடோனின் மற்றும் சேரோட்டோனின் இரண்டு பொருட்கள் உள்ளது. இதனை சாப்பிட நல்ல உறக்கம் வரும்.
6. ஒரு கப் நீரில் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது தேன் கலந்து பருக நல்ல தூக்கம் வரும்.