மழைக்காலத்தில் ஈ, கொசு மற்றும் பக்கத்திலே தோட்டம் இருந்தால் எறும்பு, பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். சுவர்களில் ஆங்காங்கே ஈரப்பதம் தங்கிவிடும். துணிமணிகள் வைத்திருக்கும் வாட்ரோப்புகளில் கூட ஈரப்பதத்தினால் ஒருவித வாடை வரும். அவற்றை போக்குவதற்கு சில எளிய வழிகளை பின்பற்றினால் சுலபமாக சமாளித்து விடலாம். அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வீடு துடைக்கும்பொழுது பச்சைக் கற்பூரத்தை நீரில் கரைத்து தெளித்து துடைத்தால் புழு, பூச்சிகள் வராது. ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையும் அதற்கு உண்டு. இதனால் வீடு சுத்தமாகும். பச்சைக் கற்பூரம் கிடைக்கவில்லை என்றால் சாதா கற்பூரத்தையும் தெளிக்கலாம்.
சாம்பிராணி புகையை அவ்வப்பொழுது போட்டு வந்தால் ஈர வாடை குறைந்து நல்ல மணமூட்டியாக செயல்படும். இதனால் ஈரப்பதம் நன்கு உறிஞ்சப்படும். இப்படி சாம்பிராணி புகையை போடும்பொழுது துணிமணிகள் வைத்துள்ள அலமாரிகள் போன்றவற்றை திறந்து வைத்து அதன் வாசனை அலமாரிகளின் உள்ளே போகுமாறு செய்தால் துணிகளில் ஈரப்பதம் தாங்காது. துணிமணியில் ஈர வாடை குபீரென்று அடிக்காது.
ஆங்காங்கே புதினா இலைகளை கசக்கிப் போட்டு வைக்கலாம். இதனாலும் ஈ மொய்க்காமல் இருக்கும். லெமன் கிராஸ், ரோஸ், லேவண்டர், ஆரஞ்சு போன்ற அரோமா ஆயில்களில் பிடித்தவற்றை வாங்கி குடி தண்ணீர் கலந்து பாட்டில்களில் தேவையான அளவு கலந்து துணிமணிகளில் ஸ்பிரே செய்யலாம். அவற்றை நன்றாகக் காய வைத்து மடித்து வைத்தால் ஈர வாடை போகும்.
துணி வைக்கும் அலமாரிகளில் சாக்பீஸ்களை கட்டி தொங்க விட்டாலும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை அதற்கு இருப்பதால் நசநசப்பின்றி உலர்ந்து இருக்கும்.
மேலும், சாம்பிராணி புகை போடுவதற்கு பற்ற வைக்கும்போது காய்ந்த பூக்கள் இலைச் சருகுகள், சிறு குச்சிகள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றின் மீது கற்பூரத்தை ஏற்றி பற்ற வைத்து அந்த நெருப்புடன் நல்லெண்ணெய் ஊற்றி பற்றும்படி செய்ய வேண்டும். பிறகு அந்த நெருப்பில் புகை போட்டால் பூ இலைகளின் வாசம் மற்றும் கற்பூர எண்ணெய் வாசத்துடன் வீடு கமகமக்கும். ஈரப்பதம் குறைந்து போகும்.
மேலும், கடைகளில் நல்ல வாசனையான சாம்பிராணி கோன்ஸ் அதிகமாக விற்பனையாகிறது. அவற்றை வாங்கி தூப காலில் ஏற்றி வைத்தால் வீடு மணமணக்கும். பூச்சி பொட்டு வராது. ஈரப்பதம் நீங்கும். கறிவேப்பிலை, புதினா, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகள் பயன்படுத்த முடியாதபடிக்கு காய்ந்து கிடந்தால் அவற்றை இந்த தூபம் போட நொச்சி, வேப்பிலைகளுடன் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மணம் நாசிக்கும் நல்லது. நல்ல கொசு விரட்டியாகவும் பயன்படும்.
சாதாரணமாக வீடு துடைக்கும்பொழுது பூச்சி பொட்டுகள் அண்டாமல் இருப்பதற்கு மண்ணெண்ணெய் பயன்படுத்துவோம். ஆனால், மண்ணெண்ணெய்க்கு ஒருவித ஈரத்தன்மை இருப்பதால் அது ஈரப்பதத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். தரையை காயவிடாமல் செய்யும். ஆதலால் மண்ணெண்ணையை மழைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
இப்படி ஏதாவது ஒன்றை மழைக்காலத்தில் தினசரி பயன்படுத்தி ஈர பதத்தையும் ஈர வாசனையையும் போக்கி, பூச்சி மற்றும் எறும்புகள் வராமல் சமாளிக்கலாம்.